world

img

தீக்கதிர் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலால் இடிபாடுகளுக்குள் சிக்கிய பாலஸ்தீனர்கள்  

இஸ்ரேலின் இனப்படுகொலை தாக்குதலில் காசாவில் கடந்த இரண்டு வாரங்களில் 350 பேர் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி காணாமல் போயுள்ளனர். இதனை காணாமல் போனவர்கள் மற்றும் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான பாலஸ்தீன மையம் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இது ஒரு சர்வதேச குற்றம் எனவும்  இதில் சர்வதேச அமைப்புகள் தலையிட வேண்டும் எனவும் அந்த அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

 சீனாவிற்கு ரஷ்யா பெட்ரோலிய எரிவாயு ஏற்றுமதி அதிகரிக்கும்

 ரஷ்யாவில் இருந்து சீனாவிற்கு செய்யப்படும் திரவ பெட்ரோலிய எரிவாயு (LPG) ஏற்றுமதிச் கணிசமாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 4,50,000 டன்களாக இருந்த ஏற்றுமதி, 2025 இல் 7,50,000 டன்களை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பது என்ற முடிவின் அடிப்படையில் இந்த ஏற்றுமதி அதிகரிப்பதாக கூறப்படுகிறது. அமெரிக்காவின் தடைகளுக்கு எதிரான இந்த பொருளாதார ஒத்துழைப்பு வரவேற்கத்தக்கதாக பார்க்கப்படுகிறது.  

இஸ்ரேலுக்கு ஆயுத விற்பனையை நிறுத்துங்கள் : ஸ்பெயின் கோரிக்கை

காசா பகுதியில் இஸ்ரேல் செய்து வரும் இனப்படுகொலை காரணமாக, அந்நாட்டிற்கு ஆயுத விற்பனையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஸ்பெயினின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோஸ் மானுவல் வலியுறுத்தியுள்ளார். மேலும் காசா மீதான போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் காசாவில் இஸ்ரேல் செய்து வரும் மனித உரிமை மீறல்களை இனிமேலும் புறக்கணிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

 பாகிஸ்தானில் பெருமழை 54 பேர் பலி : 227 பேர் காயம்

  பாகிஸ்தானில் தொடர் கனமழை வெள்ளம் காரணமாக ஒரே நாளில் மட்டும் 54 பேர் உயிரிழந்தனர் மற்றும் 227 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. மழையால் பரவலான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் லாகூர் மற்றும் ஃபைசலாபாத் மாவட்டங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகளுக்கு முக்கியக் காரணம் மழையில் சுவர் மற்றும் மேற்கூரைகள் இடிந்து விழுந்ததால் ஏற்பட்டவை என்றும் குறிப்பிட்டுள்ளது.

நேதன்யாகுவின் அரசு  பெரும்பான்மையை இழந்தது

 பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் கூட்டணியில் இருந்து மற்றுமொரு கட்சி வெளியேறியுள்ளது. மத கல்லூரி மாணவர்களை ராணுவத்தில் சேர்க்கும்  நேதன்யாகுவின் சர்ச்சைக்குரிய முயற்சிக்கு கூட்டணியில் உள்ள அல்ட்ரா ஆர்த்தடாக்ஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சி அறிவித்தது. இந்நிலையில் ஷாஸ் அல்ட்ரா ஆர்த்தடாக்ஸ் என்ற கட்சியும் கூட்டணியில் இருந்து விலகியது. இதனால் நேதன்யாகுவின் அரசு பெரும்பான்மையை இழந்தது.