பொள்ளாச்சி அருகே மலைப்பாதையில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதியிலிருந்து பராமரிப்பு பணிகளுக்காக அழைத்துச் செல்லப்பட்ட 22 பேர் பயணித்த சரக்கு வாகனம் சின்னார் பதி அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே ராணி (45) என்ற பெண் உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி திலகராஜ் (40) உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சஞ்சய் (23) என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த 5 பேர் மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 13 பேருக்குப் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், ஆழியாறு போலீசார் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.