tamilnadu

img

தமிழக அரசியலின் தியாகச் சுடர் அணைந்தது சிபிஐ முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு காலமானார்!

தமிழக அரசியலின் தியாகச் சுடர் அணைந்தது சிபிஐ முதுபெரும் தலைவர் தோழர் ஆர்.நல்லகண்ணு காலமானார்!

சென்னை, பிப். 25- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் ஆர்.நல்லகண்ணு (101) புதனன்று (பிப். 25) பிற்பகல் 2.15 மணிக்குச் சென்னையில் காலமானார். முதுமை மற்றும் மூச்சுத் திணறல் காரணமாக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது ஒரு நூற்றாண்டு காலப் புரட்சிகரப் பயணம் நிறைவுற்றது. விடுதலைப் போராட்டமும் கம்யூனிசப் பாதையும் 1925 டிசம்பர் 26-ஆம் தேதி, தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஒரு வசதியான விவசாயக் குடும்பத்தில் பிறந்த தோழர் நல்லகண்ணு, பள்ளிப் பரு வத்திலேயே தேச விடுதலைக் கனலால் ஈர்க்கப்பட்டார். பாரதியின் பாடல்களைத் தெருவெங்கும் பாடி சுதந்திர உணர்வைத் தூண்டிய அவர், தனது ஆசிரியர் பலவேசம் மற்றும் அண்ணாச்சி சண்முகம் ஆகி யோரது வழிகாட்டுதலில் கம்யூனிசத் தத்து வத்தை ஏற்றார். நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்டு, ஏழரை ஆண்டுகள் சிறைவாசத்தையும், பல ஆண்டுகள் தலை மறைவு வாழ்க்கையையும் எதிர் கொண்டவர். உழைக்கும் மக்களின் உரிமைக்குரல் நான்குநேரி வட்டாரத்தில் மடத்தின் ஆதிக்கத்திற்கு எதிராக விவசாயிகளைத் திரட்டிப் போராடி வெற்றி கண்டவர் தோழர் நல்லகண்ணு. 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்நாடு விவசாயத் தொழி லாளர் சங்கத்தின் பொதுச் செயலாள ராகப் பணியாற்றி, அடித்தட்டு மக்களின் நில உரிமைக்காகவும், சாதிய ஒடுக்கு முறைகளுக்கு எதிராகவும் சமரசமின்றிப் போராடினார். 1992 முதல் 2005 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்த அவர், தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு உயர்ந்த ஆளுமையாகத் திகழ்ந்தார். தூய்மை மற்றும் எளிமையின் இலக்கணம் பொதுவாழ்வில் தூய்மை, நேர்மை  மற்றும் தன்னலமறுப்புக்கு இலக்கண மாகத் திகழ்ந்தவர் நல்லகண்ணு. தாமிரபரணி ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராகச் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டது முதல், சாதி மற்றும் மதக்கலவரங்கள் நேர்ந்த போதெல்லாம் குன்றக்குடி அடிகளாருடன் இணைந்து அமைதிப் பணிகளை மேற்கொண்டது வரை அவரது பங்களிப்பு மகத்தானது. தமிழ்நாடு அரசு வழங்கிய ‘தகைசால் தமிழர்’ மற்றும் ‘அம்பேத்கர் விருது’ களுக்கான தொகைகளை மக்கள் நல னுக்காகவும், கட்சி வளர்ச்சிக்குமே வழங்கிய பெருமைக்குரியவர். இறுதி மரியாதை மற்றும் உடல்தானம் தோழர் நல்லகண்ணு அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஏழு நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்றும், செங்கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அறிவித்துள்ளது. அவரது நல்லுடல் சென்னை தி.நகரில் உள்ள அக்கட்சியின் மாநிலத் தலைமையகமான ‘பாலன் இல்லத்தில்’ பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப் பட்டுள்ளது. அவரது இறுதி விருப்பப்படி, வியாழன் (பிப். 26) மாலை 5 மணிக்கு அவரது உடல் மருத்துவ ஆய்வுக்காகச் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு கொடையளிக்கப்படுகிறது.