கடலூர் ,ஆக.25 நாட்டின் பொருளாதாரத்தை மத்திய பாஜக அரசு நாசப்படுத்தி விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். கடலூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் அவர் பேசிய தாவது; கடலூர் மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு நெருப்பாற்றில் நீந்திய வரலாறு உண்டு. இதனை தொகுத்து நூலாக வெளியிடுவது பாராட்டத்தக்கது. இம்மாவட்டத்தில் பெயர் கூட வெளியில் தெரியாத தோழர்கள் பலர் தொடர்ந்து சமூக சீர்கேட்டுக்கு எதிராக போராடி வருகிறார்கள். மேடையில் பேசுவ தற்காக அல்ல, அர்ப்பணிப்பு உணர்வு டன் பல தோழர்கள் பணியாற்றி வருவதை நினைவுகூர்வதற்காக சொல்கிறேன்.
60 ஆண்டுகளுக்கு முன்பே நெல்லிக்குப்பம் சி.கோவிந்தராஜன் - ஷாஜாஜி ஆகியோர் சமூக சீர்திருத்த திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும் சாதி மறுப்பு காதலர்கள் சுதந்திரமாக திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. சி. கோவிந்தராஜன், என். ராமசாமி, உள்ளிட்ட கட்சியின் மூத்த தோழர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் செய்த பணிகள் இம்மாவட்டத்தில் கட்சிக்கு தூண்களாக உள்ளது. அவர்களின் பாதையில் நாம் நடைபோட வேண்டும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்று எந்த ராமாயணத்தில் எழுதப்பட்டுள்ளது? இந்தியாவின் பாரம்பரியமே தெரியாதவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள். பாபர் மசூதி இடித்து 25 வருடம் ஆகியும் இன்றுவரை ஒரு ஆர்எஸ்எஸ்காரர்கள்கூட கைது செய்யப்படவில்லை. சிறையில் இருந்து தண்டனை அனுபவிக்க வில்லை. இதே செயலை வேறு யாராவது செய்தால் விட்டு விடுவார்களா?
இல்லாததைச் சொல்லி ஆட்சிக்கு வந்திருக்கும் பிஜேபி இந்திய பொருளாதாரத்தை சுடுகாடாக மாற்றிவிட்டது. இந்திய பொருளா தாரத்தை மத்திய பாஜக அரசு சீரழித்து வருகிறது என்று நாங்கள் பலமுறை சொன்னோம். அதனை ஏற்காத மோடி கம்பீரமாக வளர்ந்து வருகிறது என்றார். ஆனால் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளார். பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கும், பெருமுதலாளிகளுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு சலுகைகளை வழங்கி வருகிறது. பொருளாதார நெருக்கடி யில் சிக்கியுள்ள அடித்தட்டு மக்க ளுக்கும், விவசாயிகளுக்கும், மாண வர்களுக்கும் சலுகை அளிப்ப தில்லை.இத்தகைய சாபக்கேடு ஆட்சிக்கு சாவு மணி அடிக்க அனை வரும் கைகோர்க்க வேண்டும். ஏரி குளங்கள் வறண்ட நிலையில் உள்ள போது தூர்வார விவசாயிகள் வலியுறுத்தினார்கள். அதற்கு நடவடிக்கை இல்லை. தற்போது தண்ணீர் வரும்போது தூர்வார உத்தரவிட்டுள்ளனர். இதற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை திருட்டு கணக்கு எழுதி எடுக்க அனைத்து வேலைகளையும் செய்துவிட்டனர். அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளை எதிர்த்து உறுதியான போராட்டத்தை சிபிஎம் நடத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களை இருகண்கள்போல் ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபடுத்தும் மகத்தான பணியை சிபிஎம் தொடர்ந்து செய்யும். இவ்வாறு அவர் பேசினார்.