tamilnadu

img

3 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் வெள்ளம்... தடுப்பணை கட்ட மக்கள் கோரிக்கை...

வேலூர்:
நிவர் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக வேலூர் பாலாற்றில் 3 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வேலூர், காட்பாடி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும், பாலாற்றில் தடுப்பணை கட்ட கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் நல்ல கன மழை பெய்தது. இதனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு, பாலாறு, செய்யாறு ஆகிய ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நல்ல கன மழை காரணமாக பாலாற்றில் தண்ணீர் ஓடியது என்று பாலாறு ஆற்று பாதுகாவலர்கள் கூறுகின்றனர்.  ஆனால், பாலாற்றில் கழிவுநீர் கலப்பதை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.பாலாற்றில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்து வேலூர், காட்பாடி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாலாறு பாதுகாப்பு ஆர்வலர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்துவதற்கு, தமிழக அரசு பாலாற்றில் அதிகமான தடுப்பு அணைகளை கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

அதோடு, பாலாற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள பொன்னை, மல்லதரு, அகரம் மற்றும் கவுண்டின்யா போன்ற கிளை ஆறுகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் நிவர் புயலால் கனமழை பெய்ததால் பாலாறுக்கு அதிகமான வெள்ளம் வந்தது.பாலாற்றில் தண்ணீர் வருவதைப் பார்க்க போளூர் சுப்பிரமணியன் பாலம் மற்றும் காட்பாடி பழைய பாலம் ஆகியவற்றில்திரளாகக் கூடிய மக்கள் பாலாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைக் கண்டு ரசித்தனர்.

வேலூரில் உள்ள பாலாறு வழியாக சுமார் 6,000 கனஅடி தண்ணீர் செல்கிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். “மல்லதரு, பொன்னை, கவுண்டின்யா மற்றும் அகரம் போன்ற பல்வேறு கிளை ஆறுகளில் இருந்து சுமார் 15,000 கனஅடி தண்ணீர் வந்துள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் வந்ததால் நிலத்தடி நீர் மட்டம் உயரும். வடகிழக்கு பருவமழையின் போது இப்பகுதியில் இன்னும் அதிகமாக மழை பெய்யும். அதனால், பாலாற்றில் தடுப்பனை கட்டப்பட்டு தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டால் நிலத்தடி நீர் மட்டம் மேலும் உயரும்” என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டப்பட்டுவிட்டதால் பாலாற்றில் தண்ணீர் வருவது என்பது அரிதாகிவிட்டது. ஆனால், இதுபோல மழைக்காலங்களில் மழைக் காரணமாக தண்ணீர் வரும்போது அதை தடுப்பணைகள் கட்டி தேக்கிவைத்தால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தேவையும் பூர்த்தியாகும் என்று பாலாறு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

;