tamilnadu

img

கிராம சாலைகளை சீரமைக்கக்கோரி நூதனப் போராட்டத்தில் ஈடு்பட்ட வாலிபர் சங்கத்தினர்

கிராம சாலைகளை சீரமைக்கக்கோரி நூதனப்  போராட்டத்தில் ஈடு்பட்ட வாலிபர் சங்கத்தினர்

மயிலாடுதுறை, ஜூலை 28-  மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கரடு, முரடாக கேட்பாரற்றுக் கிடக்கும் சீதைசிந்தாமணி, சரபோஜிராஜபுரம், புத்திரன்திடல், உலகமகாதேவி உள்ளிட்ட கிராமங்களை, திருக்கடையூர் பகுதியுடன் இணைக்கும் சாலையை உடனே சீரமைக்க வலியுறுத்தி, திங்களன்று காலை நூதனப்போராட்டம் நடைப்பெற்றது.  சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் கார்த்திகேசன் தலைமையில் நடைபெற்ற  போரட்டத்தில் கிளை தோழர்கள் சதீஷ் மாதவன், சிவராஜ், ஏ.வி. சாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருக்கடையூரிலிருந்து சீதைசிந்தாமணி, சரபோஜிராஜபுரம், புத்திரன்திடல், உலகமகாதேவி உள்ளிட்ட கிராமங்களை இணைக்கும் தார்ச் சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குண்டும், குழியுமாக சேதமடைந்து கேட்பாரற்று கிடக்கிறது. அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டு கோரிக்கை விடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாத நிலையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமப் பெண்கள் போராட்டத்தில் பங்கேற்று நடந்துகூட செல்ல முடியாத நிலையில் உள்ள சாலையில் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்துசெல்பவர்கள் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி விடுவதாக சித்தரித்து தலை, கை, கால்கள் அடிப்பட்டு காயத்திற்கு கட்டுக்கட்டிக் கொண்டு இருப்பதைப் போன்று நடித்துக்காட்டி  கிராமத்திலிருந்து பேரணியாக வந்து கோரிக்கைகளை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தில், சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஐயப்பன், ஒன்றியத் தலைவர் பவுல் சத்தியராஜ், ஒன்றியப் பொருளாளர் ராமச்சந்திரன், ஒன்றிய துணைச் செயலாளர் ரித்தீஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆமோஸ் உள்ளிட்டோர் உரையாற்றினர்.