ஆர்ப்பாட்டத்தில் மயங்கி விழுந்த பெண்ணால் பரபரப்பு
அரியலூர், ஜூலை 8- நீர்நிலை ஆக்கிரமிப்பு எனக் கூறி வீடுகளை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்ததால் மன உளைச்சலில் இருந்த பெண் மயங்கி விழுந்தார். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நீர்நிலை புறம்போக்கில் குடியிருப்பதாகக் கூறி, வீடுகளை இயந்திரங்கள் கொண்டு இடிப்பதை கண்டித்தும், வீடுகளை இடிப்பதற்கு முன்பாக மாற்று இடம் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாய சங்கத்தின் சார்பில் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த மருதூர் கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம் என்ற பெண் திடீரென மயங்கி விழுந்ததால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, அருகில் இருந்தவர்கள் அவரது முகத்தில் தண்ணீர் தெளித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர். கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் வீடு, நீர்நிலை புறம்போக்கில் இருப்பதாகக் கூறி, வீட்டை காலி செய்ய நோட்டீஸ் கொடுத்ததிலிருந்து சரிவர சாப்பிடாமல் மன உளைச்சலில் இருந்ததால் மயங்கி விழுந்தது தெரியவந்தது. மேலும், தங்களுக்கு தமிழக அரசு அதே இடத்தினை வகை மாற்றம் செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வாறு இல்லாத பட்சத்தில் மாற்று இடம் மற்றும் வீடு கட்டி கொடுக்க தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். இவரது கணவர் ஒரு மாற்றுத்திறனாளி. இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், தனபாக்கியம் கூலி வேலை செய்து தனது பிள்ளைகளை படிக்க வைத்தும், கணவரையும் பராமரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.