tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

குப்பை கிடங்கை மாற்ற பேரூராட்சி நிர்வாகம்  நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

பொன்னமராவதி, செப். 8-  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வர்த்தக கழகத்தின் சார்பில், 53 ஆவது ஆண்டு பொதுக் குழு கூட்டம், 2025-2028 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பணி ஏற்பு விழா மற்றும் இளைஞர் அணி அமைப்பு தொடக்க விழா என முப்பெரும் விழா பொன்-புதுப்பட்டி வர்த்தகர் கழக மஹாலில் நடைபெற்றது.  விழாவிற்கு தலைவர் பழனியப்பன் தலைமை வகித்தார். செயலாளர் முகமது அப்துல்லா ஆண்டறிக்கை சமர்ப்பித்துப் பேசினார். பொருளாளர் ராமஜெயம் வரவு-செலவு அறிக்கை சமர்ப்பித்தார்.  பொன்னமராவதியில் மகளிர் காவல் நிலையம், காவல்துறையினருக்கு குடியிருப்பு, வட்டார போக்குவரத்து அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் அமைக்க வேண்டும். நகரின் மையப்பகுதியில் காணப்படும் குப்பைகளை அகற்ற பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்து நிலைய புனரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் .பொன்னமராவதியில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் கோயம்புத்தூர் மற்றும் திருச்செந்தூருக்கு பேருந்து வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கிணற்றை மீட்டுத் தர  கிராம மக்கள் கோரிக்கை

பெரம்பலூர், செப். 8-  பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம், சின்ன பரவாய் கிராமத்தைச் சேர்ந்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில், நாங்கள் சின்ன பரவாய் கிராமத்தில் வசித்து வருகிறோம். ஆதிதிராவிடப் பட்டியல் இனத்திற்கு சொந்தமான நத்தம் பகுதியில் 1955 ஆம் ஆண்டு கிராம மக்களின் குடிதண்ணீர் பயன்பாட்டிற்காக அன்று ஒப்பந்ததாரர் லேட்.சின்னசாமி என்பவர் கிணறு வெட்டி சுற்றுச் சுவர் வைத்து, வாளி மூலமாக தண்ணீர் இறைத்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செய்து கொடுத்தார். மேற்படி கிணற்றை இதே பகுதியைச் சேர்ந்த முத்துசாமி மகன் பெரியசாமி என்பவர் 01.05.2024 ஆம் தேதி சுற்றுச் சுவரையும், தூண்களையும் உடைத்து அகற்றி விட்டு, அவர் சொந்த கிணற்றைப் போல் இரும்பு கம்பிகளால் மூடி போட்டு அவர் பயன்பாட்டிற்காக மோட்டார் போட்டு பயன்படுத்தி வருகிறார். எனவே, இந்த கிணற்றை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளனர்.