ஜவஹர் என்னும் மாணிக்கம்
தோழர் ஜவஹர் மறைந்துவிட்டார் (09.09.2025) என்ற செய்தி கிடைத்த போது நான் துய ரத்தில் ஆழ்ந்து விட்டேன். தோழர் ஜவஹரோடு ஆசிரியர் இயக்கத்தில் தோளோடு தோள் நின்று பணியாற்றி இருக்கிறேன். பின்னர் பொதுவுடமை இயக்கத்தில் சக தோழராக அவரோடு பற்பல பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். நான் 22 வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தேன். குடும்பச் சூழல் காரணமாக ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். கட்சியின் வழிகாட்டுதல் படி தோழர் ஜவஹரை சந்தித்தேன். ஆசிரியர் இயக்கத்தை உருவாக்கியவர் ஆரம்பப் பள்ளியிலும், கல்லூரி யிலும் ஆசிரியர் சங்கம் வலுவாக இருந்தது. ஆனால் உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் சங்கம் அநேக மாக இல்லையென்றே சொல்லலாம். ‘கொசுவிற்கு ராஜபிளவை” வந்த மாதிரியென்று சொல்வார்களே அது போல் ஏற்கெனவே உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் சங்கங்கள் பலவீனமாக இருந்தன. அதில் இடைநிலை ஆசிரியர், பட்ட தாரி ஆசிரியர், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் என்று பல சங்கங்களாக பிரிந்து மோதிக் கொண்டு இருந்தன. இந்த சங்கங்களையெல்லாம் ஒரு கூட்டமைப்பில் கொண்டு வந்து என் போன்றவர்களை பணியாற்ற வைத்தார். இந்த அமைப்பு தான் பின்னர் ஆரம்பப் பள்ளியிலிருந்து கல்லூரி வரையிலான ‘ஜாக்டீ” அமைப்பாக உருவாயிற்று. இந்த உருவாக்கத்தில் தோழர் ஜவஹர் ஆற்றிய பணி ஒப்பற்றது. இணையற்ற தியாகம் அவரது ஆசிரியர் பணி முடிய இன்னும் 10 ஆண்டுக்கு மேல் இருந்த போதே ஆசிரியர் பணிக்கு விருப்ப ஒய்வு கொடுத்து விட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து முழுநேர ஊழியர் ஆனார். கட்சி யின் தூத்துக்குடி மாவட்ட செயற்குழு விற்கும் அவர் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் கோவில்பட்டி தாலுகா செயலாளராகவும் பணியாற்றினார். கட்சியின் மாநிலக்குழு அவரை தீக்கதிர் பத்திரிகையில் பணியாற்ற பணித்த போது அதை உடனடியாக ஏற்றுக் கொண்டார். பின்னர் கட்சி அவரை மாநிலக்குழு அலுவலகப்பணிக்கு அழைத்த போது மறுப்பேதும் சொல்லாமல் அதனையும் ஏற்றுக்கொண்டார். அவரது சிறப்பான குணம் என்னவென்றால் கட்சி முடிவு செய்யும் வேலையை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்படுவதுதான். அவர் தான் மறைந்த பிறகு மருத்துவ மாணவர்களுக்கு பயன்படக் கூடிய அளவில் தனது உடலை மருத்துவ கல்லூரிக்கு தானம் செய்தார். எளிமையான பண்பாளர் தோழர் ஜவஹர் மாவட்டச் செயற்குழு உறுப்பினராக இருந்தார். எங்களுக்கெல்லாம் அவர் தலைவ ராக இருந்த போதிலும் கூட்டத்தில் இருப்பவர்களுடைய எண்ணிக்கை யை கணக்கிட்டு டீ வாங்கி வருவார். கௌரவம் பார்க்க மாட்டார். காட்சிக்கு எளியவர். தலைச்சிறந்த கம்யூ னிஸ்ட் பண்பாளர். அரசியல் தத்துவார்த்த பணி அவரது தோளில் தொங்கும் சோல்னா பையில் மார்க்சிஸ்ட் தமிழ், ஆங்கில இதழ்களும் “சோசியல் சயின்டிஸ்ட்” போன்ற பத்திரிகைகள் மற்றும் அவ்வப்போது வெளிவரும் அரசியல் தீர்மானம், பல தத்து வார்த்த நூல்கள் இருக்கும். மத்தியத்தர வர்க்க தோழர் களுக்கு அவர்களிடமிருந்து பணத்தை எதிர்பாராமல் இந்த நூல்களை எல்லாம் கொடுத்து விடுவார். உடல் நிலை சரியில்லாமல் கோவில்பட்டி வீட்டில் இருந்தபோது அரசியல் வகுப்பிற்கான மத்திய கமிட்டி வெளியீடான பாடத்திட்ட ஆங்கில நூல்களை வாங்கி எனக்கு அனுப்பி வைத்தார். பணம் கொடுத்தபோது வாங்க மறுத்துவிட்டார். ‘‘தோழர் உங்களுக்கு வகுப்பு எடுக்க வழிகாட்டி யாக இருக்கும். இந்தநூலை வைத்து கொள்ளுங்கள்” என்றார். இறுதிக்காலம் கடைசி காலத்தில் இருதய நோயும் அதற்கான அறுவை சிகிச்சையும் அவருக்கு செய்யப்பட்டது. சற்று தேறினார். அதற்குள் புற்றுநோய் முற்றிவிட்டதை மருத்துவர்கள் கண்டுபிடித்தார்கள். அறிவியல் அறிவும் யதார்த்தத்தை சந்திக்கும் குணமும் கொண்ட அவர் ‘‘இனி என்னை காப்பாற்ற முடியாது. மருத்துவம் வேண்டாம்” என சிகிச்சை எடுத்துக் கொள்ள மறுத்தார். அவரது குடும்பத்தவர்களும், தோழர்களும் வற்புறுத்தி மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர். அந்தோ! மனித குல மாணிக்க மாக திகழ்ந்த தோழர் ஜவஹர் இயற்கை எய்தி விட்டார். என் போன்ற தோழர்களுக்கு பேரிழப்பு. அவர் காட்டிய வழியில் செயல்படுவோம். தோழர் ஜவஹர் சென்று வாருங்கள். உங்களுக்கு எமது செவ்வணக்கம்! - தி.சீனிவாசன், சிபிஎம் மூத்த தோழர், தூத்துக்குடி