tamilnadu

img

விடுதலை வேள்வியின் முதல் பொறிகள்

1757ஆம் ஆண்டு பிளாசிப்போரில் வங்காள நவாப் சிராஜ் உத்தௌலாவை வென்றதன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு வழியேற்பட்டது. நூறு ஆண்டுகளுக்குப் பின் 1857இல் மாமேதை காரல் மார்க்சால் முதல் இந்திய சுதந்திரப் போர் என்ற குறிப்பிடப்பட்ட சிப்பாய்க்கலகம் வட இந்தியாவில் நடைபெற்றது. ஆயினும் அதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பே 1806இல் வேலூரில் சிப்பாய் கலகம் நடைபெற்றது. 1857க்குப் பின் விடுதலைப் போராட்டத் தீ கொழுந்துவிட்டெரிந்தது. 90 ஆண்டுகளுக்குப் பின் 1947இல் விடுதலை கிடைத்தது. அதற்கு முதல் ஆண்டில் 1946 பிப்ரவரியில் இந்திய கப்பல் படை எழுச்சி நடந்தது. இடைப்பட்ட காலங்களில் மக்கள் எழுச்சி மாபெரும் அளவில் நடந்தது. இந்திய நாட்டின் விடுதலைக்காக தமிழ்நாட்டு மன்னர்கள், படைவீரர்கள், மக்கள் திரண்டெழுந்த அத்தியாயங்களை  சுருக்கமாகப் பார்ப்போம்.

இந்தியாவின் விடுதலைப் போர் என்கிற தலைப்பில் இந்திய வரலாற்றாசிரியர்கள் வழக்கம்போல் உண்மைகளை நிராகரிக்கிறார்கள். இந்திய வரலாற்றை எப்படி ஆரியர்களின் வரலாற்றிலிருந்து தொடங்குகிறார்களோ அதைப் போலவே இந்தியாவில் முதல் சுதந்திரப் போர் 1857இல் நடந்த சிப்பாய்க் கலகமே என்று சாதிக்கிறார்கள். ஆரியர்கள் வருகைக்கு முன்பே இந்தியாவில் மக்கள் வாழ்ந்ததும், அவர்களுக்கு ஒரு நெடிய வரலாறு இருந்ததையும் வரலாற்றாசிரியர்கள் நிராகரித்தனர். அதைப்போலவே தென்னிந்தியாவிலும் தமிழகத்திலும் விடுதலைப் போரைத் துவக்கி வைத்தவர்களின் வரலாற்றையும் நிராகரித்துள்ளனர்.

1857இல் நடந்த சிப்பாய் கலகத்துக்கு 65 ஆண்டுகளுக்கு முன்பாகவே வெள்ளையர்களுக்கெதிரான விடுதலைப்போர் தென்னிந்தியாவில் தொடங்கிவிட்டது. திப்பு சுல்தான், சித்தூர் ராணி சென்னம்மாள், வீரபாண்டிய கட்டபொம்மன், தளவாய் வேலுத்தம்பி, பூலித்தேவன், மருது சகோதரர்கள் என்று பலரும் போராடி மடிந்துள்ளனர். இவர்கள் நடத்திய போராட்டங்கள் தோல்வியடைந்ததால் வடக்கே சிப்பாய்க் கலகம் நடந்த போது தென்னிந்தியா ஓய்ந்து போயிருந்தது. இவற்றுக்கிடையேயுள்ள கால இடைவெளி 65 ஆண்டுகளாகும்.  இப்போராட்டங்களை நடத்தியவர்கள் குறுநில மன்னர்களாகவும், பாளையக்காரர்களாகவும் இருந்தனர். போர்களில் பிரிட்டிஷ் ராணுவத்தின் துப்பாக்கிகள், பீரங்கிகளுக்கு முன்னால் நம்மவர்களின் பழங்காலத்திய ஆயுதங்களால் நிற்க முடியவில்லை. நவீன ஆயுதங்களும், பிரித்தாளும் சூழ்ச்சியும்தான் பிரிட்டிசாருக்கு வெற்றி தேடிக் கொடுத்தது. பெரும்பாலான மன்னர்கள் தங்கள் சுகபோகத்தை இழக்க விரும்பாமல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாளர்களாய் நிலைத்து வாழ்ந்தனர். போராடி மடிந்த மன்னர்கள் வரலாற்றில் நிலைத்துவிட்டனர்.

தளவாய் வேலுத்தம்பி

திருவாங்கூர் சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர் வேலுத்தம்பி. குமரி மாவட்டம் இரணியல் என்ற நகருக்கருகிலுள்ள தலைக்குளம் என்ற ஊரில் பிறந்தவர். இவருக்கு முன்பு மன்னர் பலராம வர்மாவிடம் தளபதியாக இருந்த ஜெயந்தன் சங்கரன் என்பவன் சமூகவிரோதிகளின் தலைவனாக விளங்கினான். வேலுத்தம்பி மக்களைத் திரட்டி சமூகவிரோதிகளின் கொட்டத்தை ஒடுக்கினார். இதனால் மன்னர் பழைய தளபதியை நீக்கிவிட்டு வேலுத்தம்பியை தளபதியாக்கினார். பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி மன்னருக்கு ஏராளமாய் கடன் கொடுத்தது. அப்போது அங்கு ரெசிடன்ட் பதவியிலிருந்தவன் கர்னல் மெக்காலே. இவன் தனது பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தி மன்னரையும் வேலுத்தம்பியையும் பிரித்தான். வேலுத்தம்பியைப் பயன்படுத்தி மன்னரை தனது அடிமையாக்க முயன்றான். சமஸ்தானப் படைகளை நிறுவினான். இதை எதிர்த்து சமஸ்தானத்தின் சுதேசிப் படையான நாயர்படை கலகம் செய்தது. பொதுமக்கள் நாயர் படைக்கு ஆதரவாகத் திரண்டனர்.

சுதேசிப் படைக்கு ஆதரவாக மக்கள் திரளுவதைப் பார்த்து வேலுத்தம்பி மனமாற்றம் அடைந்தார். இதுவரை பிரிட்டிசாருக்கு ஆதரவாக இருந்த வேலுத்தம்பி மக்களுடைய ஆதரவோடு கர்னல் மெக்காலேக்கு எதிராகப் புரட்சியைக் கிளம்பினார். புரட்சிப் படை தளபதியாகி வெள்ளைப் படைகளை எதிர்த்துப் போர் புரிந்தார். திருவாங்கூர், கொச்சி சமஸ்தானப் பகுதிகள் முழுவதும் இப்போர் நடந்தது. இறுதியில் வெள்ளைப்படைகள் வெற்றி கண்டன. போரில் வீழ்ச்சியடைந்த பின் வேலுத்தம்பியை வெள்ளைப் படைகள் வேட்டையாட வந்தன. வேலுத்தம்பி தனது கைவாளினால் தற்கொலை செய்து கொண்டார். பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வேலுத்தம்பி தலைமையில் நடந்த கேரள மக்களின் இந்த வீரமிக்க புரட்சி பற்றி ‘சுதந்திரப் போரில் கேரளம்’ என்ற நூலில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

“தம்மைத் தாமே அடிமையாக்கிய இந்தியர்”

ரஷ்ய இலக்கிய மேதை டால்ஸ்டாய் இந்தியா அடிமைப்பட்டது குறித்து “சுதந்திர இந்துஸ்தானம்” என்ற இந்தியப் பத்திரிகையின் ஆசிரியருக்கு ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் “வாணிபம் செய்ய வந்த ஒரு கம்பெனியார் இருபது கோடி மக்களை அடிமைப்படுத்தினார்கள். மூடநம்பிக்கையற்ற ஒரு மனிதனிடம் இதைச் சொல்லிப்பாருங்கள். அவன் இதை நம்பமாட்டான். பலமற்ற முப்பதாயிரம் பேர் வந்து வீரமும், ஆற்றலும், சுதந்திர வேட்கையும் மிகுந்த இருபது கோடி மக்களைப் பணியவைத்துவிட்டார்கள்.” “அதன் அர்த்தம் என்ன? முப்பதாயிரம், இருபது கோடி என்ற எண்ணிக்கையைப் பார்க்கிற போது என்ன தெரிகிறது? இந்தியரை அடிமைப்படுத்தியது ஆங்கிலேயரல்ல. இந்தியர் தம்மைத்தானே அடிமையாக்கிக் கொண்டனர் என்பது விளங்கவில்லையா?’’ என்று மெத்த வருத்தத்தோடு டால்ஸ்டாய் குறிப்பிட்டுள்ளார்.
 

;