கரூரில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி
கரூர், ஜூலை 8- கரூரில் நடைபெற்ற மாநில அளவிலான இறகுப்பந்து போட்டியின் இரட்டையர் பிரிவில் திருப்பூர் அணி வெற்றி பெற்றனர். கரூர் மாவட்ட இறகுப்பந்து கழகம் சார்பில் மாநில அளவில் ஆண்கள், பெண்களுக்கான சீனியர் இறகுப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் தனிநபர் ஆண்கள், பெண்கள் மற்றும் இரட்டையர் ஆண்கள், பெண்கள், கலப்பு இரட்டையர் பிரிவு ஆகிய பிரிவுகளில் போட்டிகள் கடந்த 30 ஆம் தேதி முதல் கரூரில் தொடங்கி நடைபெற்றது. போட்டியில் ஆண்கள் பிரிவில் 28 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்களும், பெண்கள் பிரிவில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த வீராங்கனைகளும் என மொத்தம் 474 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை நடைபெற்றது. இதில் கலப்பு இரட்டையர் பிரிவில் திருப்பூரைச் சேர்ந்த வீரர் ரோஹித், ரிதுவர்ஷினி ஜோடியும், கோவையைச் சேர்ந்த லோகேஷ் விஸ்வநாதன், பிரவந்திகா ஜோடியும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் 19-21, 21-16, 22-26 என்ற நேர்செட் கணக்கில் திருப்பூர் அணியின் ரோஹித், ரிதுவர்ஷினி வெற்றி பெற்று இரட்டையர் கலப்பு பிரிவில் கோப்பையையும், பரிசுத் தொகையான ரூ.10 ஆயிரத்தைப் பெற்றனர். தொடர்ந்து, அனைத்து பிரிவுகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு, கரூர் மாவட்ட இறகுப்பந்து கழகத்தலைவர் விசா மா.சண்முகம் தலைமை வகித்தார். செயலாளர் என்.அருண் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக கரூர் மாவட்ட வருவாய் அலுவலர் ம.கண்ணன் பங்கேற்று, வெற்றிபெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத்தொகை, சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார். தமிழ்நாடு இறகுப்பந்து கழக பொதுச் செயலாளர் அருணாச்சலம், துணைத் தலைவர் முனைவர் டி.மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.