மதுரை, டிச.21- சிறு, குறுந்தொழில்கள், நடுத்தர தொழில்களை பாதுகாக்கக்கோரி டிசம்பர் 20 அன்று கதவடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. பாஜக அரசின் கொள்கையால் மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்து கடும் பாதிப்படைந்துள்ள சிறு,குறுந்தொழில்கள், நடுத்தர தொழில்களை பாதுகாக்க ஜிஎஸ்டி வரி விதிப்பை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டக்குழு வலியுறுத்தியுள்ளது. ஒன்றிய பாஜக அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை, ஏற்கெனவே கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான சிறு,குறுந்தொழில்கள் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கான சிறு,குறுந்தொழில்கள் மூடப்பட்டுள்ளது.
இதன்காரணமாக, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வேலைவாய்ப்பு குறைந்ததன் காரணமாக தொழிலாளர்களது ஊதியம் குறைந்துள்ளது. ஒன்றிய பாஜக அரசின் தொழில் கொள்கை காரணமாக - மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 2021 பிப்ரவரியில் ரூ.51 ஆக இருந்த இரும்பின் விலை தற்போது ரூ.90 ஆக உயர்ந்துள்ளது. பஞ்சு விலை உயர்வின் காரணமாக நூல்கள் விலை, துணிகள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஏற்றுமதியால் விலை உயர்வு அதேபோல், மூலப்பொருட்கள், தாதுப்பொருட்கள் ஏற்றுமதியின் காரணமாக - உள்நாட்டில் மூலப்பொருட்கள், தாதுப்பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதன்காரணமாகவும் விலைகள் உயர்ந்து வருகிறது. மறுபுறம், உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் சந்தைக்கு - விற்பனைக்கு வரும் போது ஜி.எஸ்.டி. மற்றும் வாட் வரி உயர்வின் காரணமாகவும் பொருட்கள் விலை 30 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை உயர்வு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 250 ரூபாய்க்கு விற்பனை செய்த சேலைகள் தற்போது ரூ.500க்கு விற்பனை செய்ய வேண்டிய அளவிற்கு விலைகள் உயர்ந்துள்ளது. இதனால் பொருள் வாங்குவோரும், விற்பனை செய்பவரும் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதன்காரணமாக, விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே, உற்பத்தி செய்வதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
ஜவுளித்துறையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஒன்றிய அரசின் நிதியமைச்சரிடம் கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ளார். இரும்பு மற்றும் தாதுப்பொருட்களை கார்ப்பரேட்டுகள் மூலம் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் போக்கு நீடிக்கிறது. கடும் சிரமத்திற்கு இடையே தொழில்கள் நடத்தும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக - மின்கட்டணம் செலுத்த முடியாமல், இட வாடகை செலுத்த முடியாமல், வங்கி கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் உற்பத்தி முடக்கம் ஏற்பட்டு சிறு,குறுந்தொழில்கள், நடுத்தர தொழில்கள் மூடப்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய - மாநில அரசுகள் கடந்த 2 ஆண்டுகளில் சிறு,குறு, நடுத்தர தொழில்முனைவோர் செலுத்திய வரி, மின் கட்டணம், கடனுக்கான வட்டி தொகையை திரும்ப வழங்கிட வேண்டும். சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தகுதி அடிப்படையில் 6.5 சதமானம் வட்டியில் கடன் வழங்கிட வேண்டும்.
ஒவ்வொரு வங்கி கிளையிலும் சிறு,குறுந்தொழில் நிறுவனங்களுக்கு என தனி மேலாளர் அமர்த்தப்பட வேண்டும். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையை ரத்து செய்துவிட்டு - பழைய முறையிலான வாட் வரிவிதிப்பு முறையை கொண்டு வர வேண்டும். உற்பத்திக்கான மூலப்பொருட்களை நிலையான விலையில் கிடைத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை அமல்படுத்துவதன் மூலமே சிறு, குறுந்தொழில்களை, நடுத்தர தொழில்களை பாதுகாத்திட முடியும். நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களை வேலையிழப்பிலிருந்து பாதுகாத்திட முடியும். எனவே, ஒன்றிய - மாநில அரசுகள் மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.