ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட முதியவரை தேடும் பணி தீவிரம்
கடலூர், அக்.24- கடலூரில் இரண்டு நாட்களாக பெய்த மழையால் பரவனாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மாடு மேய்ச்சலுக்கு சென்ற முதியவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டதால் தீயணைப்புதுறையினர் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடத்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையால் தென்பெண்ணை, கெடிலம், பரவனாறு, வெள்ளாறு, மணிமுத்தாறு, கொள்ளிடம், அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் நீர் செல்கிறது. மாவட்ட நிர்வாகம் சார்பில் நீர்நிலைப் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம், கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டாம் என ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடலூர் அடுத்த பெத்தான் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் (வயது62) முதியவர் வெள்ளியன்று மாடுகளை பரவனாறு அருகே மேய்த்துக் கொண்டு இருந்தார். இந்த நிலையில் ஆற்றில் இறங்கிய முதியவர் மணிவேல் வெள்ளப்பெருக்கில் அடுத்துச் செல்லப்பட்டார். தகவல் அறிந்து வந்த ஊர் மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறை மற்றும் தமிழ்நாடு மீட்பு படையினர் பரவனாற்றில் உடலை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
