tamilnadu

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா: செப்.9, 13 இல் மாணவர்களுக்கு போட்டிகள்

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா:  செப்.9, 13 இல் மாணவர்களுக்கு போட்டிகள்

புதுக்கோட்டை, ஆக. 31-  புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் இணைந்து அக். 3 முதல் 12 ஆம் தேதி வரை புத்தகத் திருவிழாவை நடத்தவுள்ள நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளை செப். 9 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, இயக்கத்தின் மாவட்டத் தலைவர் மு.முத்துக்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஸ்டீபன்நாதன், மாவட்டச் செயலாளர் எம். வீரமுத்து, மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் அ. மணவாளன் உள்ளிட்டோர் பேசினர்.  கூட்டத்தில் வரும் அக். 3 முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா பணிகளை அனைத்து ஒன்றிய அளவில் கொண்டு செல்லவும், கிராமங்கள் தோறும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு புத்தகத் திருவிழா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகளை, செப். 9 ஆம் தேதி அந்தந்த ஒன்றிய அளவிலும், இவற்றில் வெற்றி பெறும் மாணவர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட அளவிலான போட்டியை செப். 13 ஆம் தேதியும் நடத்த முடிவு செய்யப்பட்டது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகம் மூலம் இதற்கான அறிவிப்புகளை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பிடவும், மாணவர்களை திரளாக இந்தப் போட்டிகளில் பங்கேற்கச் செய்யவும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.