பிரதமர் மோடி - வாங் யீ சந்திப்பு
இந்திய-சீன உறவு குறித்து பேச்சுவார்த்தை
புதுதில்லி, ஆக. 19 - இந்தியா வந்துள்ள சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை செவ்வாயன்று சந்தித்தார். அப்போது, இந்தியா - சீனா எல்லைப் பிரச்சனைகள் தொடர்பாக அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆகஸ்ட் 31 – செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாட்கள் சீனாவில் நடைபெறும் ஷாங்காய் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளார். இந்நிலையில், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக திங்களன்று (ஆக.18) வாங் யீ இந்தியா வந்தார். முதல் நாள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கு இடையிலான முரண்கள் கருத்து வேறுபாடுகள் சச்சரவுகளாகவோ மோதலாகவோ மாறக்கூடாது என்பது பற்றி பேசப்பட்டதாகவும், இந்திய - சீனா இருதரப்பு உறவை மறு ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது எனவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். இரண்டாம் நாளாக செவ்வாயன்று தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் வாங் யீ சந்திப்பு மேற்கொண்டார். கடந்த அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கசான் நகரில் நடந்த பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு இரு நாட்டின் உறவிலும் ஆரோக்கியமான “புதிய போக்கு” உருவாகி வருகிறது. இதன் மூலம் இந்தியா நிறைய லாபம் அடைந்து வருகிறது. இருதரப்பு ஈடுபாடுகளும் “சமச்சீராக உள்ளது” என்று அஜித் தோவல் தெரிவித்திருந்தார். இந்த புதிய சூழலானது பல்வேறு துறைகளில் முன்னேற உதவியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். வாங் யீ பேசிய போது, கடந்த சில ஆண்டுகளாக நாம் அனுபவித்த பின்னடைவுகள் நமது இரு நாட்டு மக்களுக்கும் நன்மை தரக்கூடியது அல்ல. ரஷ்யாவில் நடைபெற்ற சந்திப்பு பிறகு இருதரப்பு உறவுகளின் வளர்ச்சிக்கு ஒரு திசையை சுட்டிக்காட்டியுள்ளது. நமக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்சனையை முறையாகத் தீர்ப்பதற்கான உந்து சக்தியையும் கொடுத்துள்ளது என்று தெரிவித்தார். அஜித் தோவலுடனான சந்திப்புக்குப் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.