விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையம் வாயிலாக முன்பதிவு
திருவள்ளூர் ஆட்சியர் அழைப்பு
திருவள்ளூர், ஆக 6- முதலமைச்சர் கோப்பை விளை யாட்டுப் போட்டிகள் நடைப்பெற உள்ளதை முன்னிட்டு இணையதளம் வாயிலாக - முன்பதிவு செய்து கொள்ள விளை யாட்டு வீராங்கனைகளுக்கு திரு வள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், திருவள்ளூர் மாவட்டம் சார்பாக 2025-2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் பல்வேறு விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும் முதலமைச்சர் கோப்பைக்கான பொதுமக்கள் பிரிவில் தடகளம், கிரிக்கெட், கால்பந்து வாலிபால், கேரம், சிலம்பம், இறகுப்பந்து மற்றும் கபடி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் வரும் 22.08.2025 முதல் 12.09.2025 வரை திருவள்ளூர் மாவட்டத்தில் நடத்தப்பட உள்ளது. மேலும் இறகுப்பந்து மற்றும் கபடி போட்டியில் முதலிடம் பெற்றவர்கள் மட்டுமே மாநில விளையாட்டு போட்டிக்கு தகுதி பெறுவார்கள். பொது மக்கள் பிரிவில் 15 முதல் 35 வயதுக்குட்பட்டவர் மட்டுமே இந்தப் பதிவினை செய்திட இயலும், அவர்கள் தங்கள் ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் இரண்டையும் கொண்டு பதி வேற்றம் செய்திட வேண்டும், அவர்கள் ஆதார் அட்டை முகவரியில் உள்ள மாவட்டத்தில் மட்டுமே பங்கேற்க முடியும், பதிவு மற்றும் பங்கேற்பு ஒரு மாவட்டத்தில் மட்டுமே செய்யப்பட வேண்டும், இந்தப் பிரிவின் கீழ் விண்ணப்பதாரர்கள் 01.01.1990 மற்றும் 01.01.2010 (இரண்டு தேதிகளும் உட்பட) இடையே பிறந்திருக்க வேண்டும் , குழுப் போட்டிகளில் கேப்டன் ஆதார் அட்டை மற்றும் புகைப்படம் கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் மற்ற வீரர்களின் ஆதார் எண்ணை மட்டுமே கொண்டு முழு பதிவு செய்துக் கொள்ளலாம், தனி நபர் விளையாட்டு போட்டிகளுக்கு ஆதார் மற்றும் புகைப்படம் கண்டிப்பாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், ஒரு வீரர் தடகளப் போட்டியில் மட்டுமே இரண்டு பிரிவுகளில் பங்கேற்க இயலும், குழுப் போட்டியில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்க இயலும். மேலும் இப்போட்டிகளில் கலந்து கொள்வதற்கான https://cmtrophy.sdat.in என்ற இணையதளம் முகவரி மூலமாக பொதுமக்கள் பிரிவில் முன்பதிவு செய்து அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திடலாம். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும். மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் பின் புறத்தில் அமைந்துள்ள மாவட்ட விளை யாட்டரங்க அலுவலகத்திலோ அல்லது 9514000777 ஆடுகளம் என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.