பதிவு அஞ்சல் சேவை நிறுத்தும் மோடி அரசு அக்டோபர் முதல் அமலுக்கு வருகிறது!
சென்னை, ஆக. 25 - இந்திய அஞ்சல் துறையானது, 171 ஆண்டுகால பதிவு அஞ்சல் சேவையை அக்டோபர் 1 முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இந்திய அஞ்சல் சேவை 1766-இல் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியில் “கம்பெனி மெயில்” என்ற பெயரில் வாரன் ஹேஸ்டிங்ஸால் தொடங்கப்பட்டது. 1854-இல் டல்ஹௌசி பிரபுவால் சீரமைக்கப்பட்டு அஞ்சல் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே அதிகாரப்பூர்வ இந்திய அஞ்சல் துறையின் தொடக்கமாக கருதப்படுகிறது. தற்போது 1.59 லட்சத்திற்கும் அதிகமான அஞ்சல் நிலையங்களுடன் உலகின் மிகப்பெரிய அஞ்சல்துறையாக இந்திய அஞ்சல்துறை செயல்படுகிறது. இதில், பதிவு அஞ்சல் சேவை 1854-இல் அறிமுகப்படுத்தப்பட்டது. நீதிமன்றம், வங்கி, அரசுத் துறை சார்ந்த முக்கியக் கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் பதிவு அஞ்சல் மூலமே அனுப்பப்படுகின்றன. பதிவு அஞ்சலை குறிப்பிட்ட நபரே பெற முடியும் என்பது இதன் தனிச்சிறப்பாகும். பாதுகாப்பான ஆவண விநியோகத்திற்கு இது நம்பகமான சேவையாக விளங்கி வந்தது. இந்நிலையில், அனைத்து அரசுத் துறைகளையும் சீரழித்து, மக்களைத் தனியார்மயத்தை நோக்கி தள்ளிவிடும் ஒன்றிய பாஜக அரசு, பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, அஞ்சல் துறையையும் சீரழிக்கத் துவங்கியது. அதனொரு பகுதியாக, ஏதேதோ காரணங்களைக் கூறி, பதிவு அஞ்சல் சேவையை அக்டோபர் 1 முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இதனை விரைவு அஞ்சல் சேவையுடன் இணைப்பதாக அறிவித்துள்ளது. இதனால், கட்டணங்கள் இரண்டு முதல் மூன்று மடங்கு வரை அதிகமாக செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. பெரும் எண்ணிக்கையிலான மக்களை, தனியார் கொரியர் நிறுவனங்களை நோக்கி, மோடி அரசு தள்ளிவிட்டுள்ளது.