மயிலாடுதுறை வாலிபர் சங்க மாவட்ட மாநாடு:
மயிலாடுதுறை, செப். 28- மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 19 ஆவது மாவட்ட மாநாடு சனிக்கிழமை துவங்கியது. கோரிக்கைகளை முழங்கியபடி டி. மணல்மேடு கிராமத்தில் துவங்கிய மாபெரும் வெண்கொடி பேரணியை, சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஏ.ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார். தில்லையாடி நுழைவாயில், பிரதான சாலை வழியாக பொதுக்கூட்டம் நடைபெற்ற திருக்கடையூர் சன்னதி வீதி வரை பறையிசைத்து, பட்டாசு வெடித்து 500-க்கும் மேற்பட்ட வாலிபர் சங்கத்தினர், பொதுமக்கள் பேரணியாக வந்தனர். தொடர்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எம். ஐயப்பன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலாளர் ஜி. கார்த்திகேசன் வரவேற்று பேசினார். மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக், மாநில செயற்குழு உறுப்பினர் டி.அருள்தாஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டச் செயலாளர் ஏ. அறிவழகன், மாநில செயற்குழு உறுப்பினர் என்.ஆனந்தி, மாவட்டப் பொருளாளர் கே. தேவேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் பவுல் சத்தியராஜ், மாவட்ட துணைச் செயலாளர் எம்.குமரேசன் உள்ளிட்டோர் உரையாற்றினர். முன்னதாக, சென்னை மாற்று ஊடக மையத்தின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. சாதி ஆணைப்ப டுகொலையை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்றிட தோழர் கே. வைரமுத்து நினைவு சுடர்ப்பயணம், அதிகரித்து வரும் வேலையின்மைக்கு எதிராக, சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதலை தடுத்திட, கனிமவள கொள்ளையை தடுத்திட வலியுறுத்தி, பெண்கள் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சுடர் பயணங்கள், கொடி பயணம், கொடி மர பயணங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து புறப்பட்டு மாநாடு பொதுக்கூட்ட மேடையில் பெறப்பட்டது. ஒன்றிய துணைத் தலைவர் ஜி. தீபிகா நன்றி கூறினார்.
