பகுத்தறிவுப் பேரொளி எங்கும் நிலைத்திருப்பார்!
முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம் சென்னை, செப். 17 - “தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்” என அவரது பிறந்த நாளில் முதல்வர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தந்தை பெரியாரின் பிறந்த நாளை, ‘சமூகநீதி நாள்’ ஆக அறிவித்து, 2021 முதல் தமிழ்நாடு அரசு கடைப்பிடித்து வருகிறது. இந்நிலையில், பெரியாரின் 147-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ‘எக்ஸ்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தந்தை பெரியார் - இனப்பகையைச் சுட்டெரிக்கும் பெருநெருப்பு! தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி! தந்தை பெரியார் என்றும் - எங்கும் நிலைத்திருப்பார்!” எனப் பதிவிட்டுள்ளார். அதனுடன் செயற்கை அறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்றையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். பெரியாரை கிராபிக்ஸ் மூலம் உருவாக்கி அவரது போராட்டங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துரைக்கும் வகையில் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.