2500 டன் அரிசி மூட்டைகளுடன் 3 நாட்களாக காத்திருக்கும் லாரி ஓட்டுநர்கள்
சரக்கு ரயிலில் ஏற்றுவதற்கு வேகன்கள் ஒதுக்கவில்லை!
தஞ்சாவூா், ஜூலை 21- தஞ்சாவூர் சேமிப்புக் கிடங்குகளில் இருந்து, புழுங்கல் அரிசி மூட்டைகள் பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயிலில் வேகன்களில் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு அந்தந்த மாவட்டங்களில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இந்த அரிசி விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஏராளமான லாரிகளில் குடோனிலிருந்து அரிசி மூட்டைகள் ஏற்றப்பட்டு ரயில் நிலையத்திற்குக் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு தஞ்சையில் இருந்து, தூத்துக்குடிக்கு சரக்கு ரயிலில் 2500 டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் அனுப்புவதற்காக, குடோன்களில் இருந்து ஏராளமான லாரிகளில் ஏற்றி வரப்பட்டது. ஆனால் சரக்கு ரயிலில் போதிய வேகன்களை ரயில்வே நிர்வாகம் ஒதுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் மூன்று நாட்களாக குட்ஷெட் பகுதியில் ஏராளமான லாரிகளில் அரிசி மூட்டைகளுடன் ஓட்டுநர்கள் காத்துக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, உடனடியாக சரக்கு ரயிலில் தேவையான வேகன்களை ஒதுக்கி, லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை, சரக்கு ரயிலில் ஏற்ற வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.