அறந்தாங்கி அரசு கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
அறந்தாங்கி, செப். 24- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்டமும், ஆவுடையார்கோவில் வட்ட சட்டப்பணிகள் குழுவும் இணைந்து, குடும்ப நலச் சட்ட விழிப்புணர்வு முகாமை, நடத்தினர். கல்லூரி முதல்வர்(பொ) முனைவர் து. சண்முகசுந்தரம் தலைமை தாங்கித் தொடங்கி வைத்தார். கல்லூரி கணினி அறிவியல் துறைப் பேராசிரியரும், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருமான முனைவர் ச.ரமேஷ் முன்னிலை வகித்தார். முகாமில், சட்டம் குறித்த விளக்கங்கள், நீதிமன்ற நடைமுறைகள், அணுகுமுறைகள், குடும்ப நல வழக்குகள், அவற்றிற்கான தீர்வுகள் குறித்து, ஆவுடையார்கோவில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் வழக்கறிஞர்கள் எஸ்.பி. லோகநாதன், ஆர்.மஞ்சுளா, எஸ்.பழனியப்பன் ஆகியோர் கருத்துரைகளை வழங்கினர். முன்னதாக ஆவுடையார்கோவில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில், சட்ட உதவிகளும், ஆலோசனைகளும் எனும் தலைப்பிலான துண்டு பிரசுரங்கள் மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு.பழனித்துரை வரவேற்றார். அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சட்ட தன்னார்வலர் பி. சாந்தி நன்றி கூறினார்.