tamilnadu

img

மனைப் பட்டா வழங்க வேண்டும்: பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு

மனைப் பட்டா வழங்க வேண்டும்:  பட்டியலின மக்கள் ஆட்சியரிடம் மனு

தஞ்சாவூர், செப். 8-  தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில், மாநகரக் குழு உறுப்பினர்கள் சி.ராஜன், ஆர். மணிமாறன், பி. புனிதா மற்றும் மணக்கரம்பை ஊராட்சி எம்ஜிஆர் நகர், அண்ணா நகர், காந்திநகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.  அந்த மனுவில், “இப்பகுதியில் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் 40, 50 ஆண்டு காலமாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் எவ்வித அடிப்படை வசதியும் இன்றி தவித்து வருகிறோம். நாங்கள் குடியிருந்து வரும் பகுதிக்கு அருகிலேயே அரசு புறம்போக்கு நிலம், தனிநபர் ஆக்கிரமிப்பில் உள்ளது. இதுகுறித்து அரசு அலுவலர்களிடம் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  எனவே, இப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தை மீட்டு, எங்களுக்கு மனைப் பட்டா வழங்கி, தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும். மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து கிரையம் பெற்றுள்ளவர்களுக்கு, பட்டாவில் உரிய தேவையான மாறுதல்கள் செய்து தர வேண்டும். எங்கள் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்து தர வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.