காசாவில் 32 பேர் சுட்டுக் கொலை ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் அடாவடி!
காசா, அக். 15 - இடைக்கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இஸ்ரேல் ராணுவம் காசா நகரில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் 32 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. காசா-வை ஆக்கிரமிக்கும் வகையில், பாலஸ்தீனர் கள் மீது இஸ்ரேல் கொடூரமான இனப்படுகொலை யுத்தத்தை நடத்தி வருகிறது. இதனிடையே, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஏற்பாட்டில், இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே, அக்டோபர் 11 முதல் இடைக்கால போர் நிறுத்த உடன்பாடு கையெழுத்தானது. இதனைத் தொடர்ந்து, இருதரப்பும் கைதிகளைப் பரிமாற்றம் செய்து கொண்டன. இறந்து போன பணயக் கைதிகளின் உடல்களை முழுமையாக ஒப்படைக்க ஹமாஸ் அமைப்பு கூடுதல் அவகாசம் கேட்டிருந்தது. ஒப்பந்தத்தின் முக்கிய அம்சம், தாக்குதலை நிறுத்து வதும், உணவு, மருந்து உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை காசாவிற்குள் அனுமதிப்பதும் ஆகும். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் காசா நகரில் துப்பாக்கிச் சூடு நடத்தி 32-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை படுகொலை செய்து, மீண்டும் அராஜகத்தை அரங்கேற்றியுள்ளது. மேலும், ஒப்பந்தத்தில் நிவாரணப் பொருட்களுடன் நாளொன்றுக்கு 600 டிரக்குகள் காசா-விற்குள் செல்லலாம் என கையெழுத்தாகியுள்ள நிலையில், நாளொன்றுக்கு 300 டிரக்குகளை மட்டுமே அனுமதிக்க முடியும் என ஐ.நா. அவைக்கு இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ரஃபா எல்லைப் பாதையை திறக்கப் போவதில்லை என்றும் அறிவித்துள்ளது. கடந்த முறையும், இஸ்ரேல் தான் இடைக்கால போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதலைத் துவங்கியது. இந்த முறையும் அதையே இஸ்ரேல் செய்துள்ளது.
