விடியலுக்காக காத்திருக்கும் கூடலூர் விவசாயிகள்
கூடலூர் பகுதி 1887 வரை மதராஸ் மாநிலத்தின் மலபார் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பிரிட்டிஷார் காலத்தில் தேயிலை தோட்டங்களில் பணியாற்ற தமிழகம், கேரளா, கர்நாடகாவிலிருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். பணியர், காட்டு நாயக்கர், பெட்டக் குறும்பர், முள்ளக்குறும்பர் போன்ற பழங்குடி மக்கள் இங்கே வசித்து வந்தனர். ஜென்மம் ஒழிப்பும் அடக்குமுறையும் 1969இல் ஜென்மம் நில ஒழிப்புச் சட்டத்திற்குப் பின் விவசாயிகளை நிலத்திலிருந்து வெளியேற்ற வனத்துறை முயற்சித்தது. வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன, பயிர்கள் அழிக்கப்பட்டன, துப்பாக்கிச்சூடு நடந்தது, நூற்றுக்கணக்கானவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர். பெண்களும் குழந்தைகளும் இரவில் காப்பி தோட்டங்களில் தங்கினர். ஏ.கே. கோபாலனின் தலையீடு நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஏ.கே. கோபாலன் நேரடியாக கூடலூர் வந்து விவசாயிகளை சந்தித்தார். பின்னர் முதலமைச்சர் கலைஞரை சந்தித்து பட்டா வழங்க வலியுறுத்தினார். இதன் விளைவாக 1972-75 காலத்தில் 6,000 குடும்பங்களுக்கு 18,000 ஏக்கருக்கு பட்டா வழங்கப்பட்டது. கருப்புச் சட்டங்களின் திணிப்பு பின்னர் தமிழக அரசு விவசாயிகள் மீது பல கருப்புச் சட்டங்களை திணித்தது: 1989 - 1168 பட்டா தடைச் சட்டம் / 1991 - பெல்ட் ஏரியா திட்டம் 2005 - யானை வழித்தடம் / 2006 - புலிகள் காப்பகம் 2024 - யானை வழித்தட விரிவாக்கம் தற்போதைய அவல நிலை வீடு கட்ட தடை, மின் இணைப்பு தடை, சாலை போட தடை, நிலம் விற்க-வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கூடலூர் பகுதியில் 80,088 ஏக்கர் ஜென்மம் நிலத்தில் 13,101 ஏக்கர் சிறுகுறு விவசாயிகளின் அனுபவத்தில் உள்ளது. இதில் 4,939 ஏக்கர் நிலம் 10,052 விவசாயிகளிடம் உள்ளது. அவசரத் தேவைகள் • பத்தாயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க வேண்டும். • வனவிலங்குகளால் கடந்த பத்து ஆண்டுகளில் 140 பேர் கொல்லப்பட்டுள்ளனர். • மனித-விலங்கு மோதலை தடுக்க அகழிகளும் 4 மீட்டர் உயர வேலிகளும் அமைக்க வேண்டும். • ஒரு கிலோமீட்டருக்கு 45 லட்சம் ரூபாய் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை பயன்படுத்தலாம். 55 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் போராட்டத்தில் 13,101 ஏக்கர் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்கும் விடியல் எப்போது வரும்?