மதுரை:
ஓய்வூதியர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. மத்திய-மாநில அரசின் மக்கள் விரோதக்கொள்கைகளை எதிர்த்துப் போராடுபவர் களுக்கு தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் துணை நிற்கும் என அமைப்பின் மாநிலத் தலைவர் நெ.இல சீதரன் கூறினார்.
மாநிலப்பேரவை
தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் ஐந்தாவது மாநிலப்பேரவை மதுரையில் செவ்வயான்று நடைபெற்றது. சங்கக்கொடியை மாநிலத் தலைவர்நெ.இல.சீதரன் ஏற்றிவைத்தார், வரவேற்புக்குழுத் தலைவர் மு.பரமேஸ்வரன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாநிலப் பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி, மாநிலப் பொருளாளர் ந.ஜெயச்சந்திரன் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். மாநாட்டை மாநிலத்துணைத் தலைவர் தூத்துக்குடி வெங்கடேஷ் துவக்கி வைத்தார். மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய-மாநில பொதுத்துறை ஓய்வூதியர் ஒருங்கிணைப்புக்குழு கன்வீனர் கே.ராகவேந்திரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.வரவேற்புக்குழு செயலாளர் பி.பாலசுப்பிர மணியன், மாநிலச் செயலாளர் ஆ.பக்கிரி சாமி ஆகியோர் நன்றி கூறினர்.
மாநாட்டில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோக முறையைபலப்படுத்த வேண்டும். ஆன் லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும். அரசணை 56-ஐ ரத்து செய்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 97 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியநெ.இல.சீதரன், ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை பேசித் தீர்க்கவேண்டுமென தமிழக முதல்வருக்கு பத்திற்கும் மேற்பட்டமுறை மனுக்கள் அளித்தும் ஐந்தாண்டுகாலத்தில் ஒரு முறை கூட அவர் அழைத்துப்பேசவில்லை. அரசு ஊழியர்களின் நிலையும் இதுதான்.
தமிழக அரசு ஓய்வூதியர்களுக்கான காப்பீட்டுத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். காசில்லா மருத்துவம் ஓய்வூதியர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் வழங்கவேண்டும். ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றால் அவர்களுக்கான முழுத் தொகையையும் அரசு வழங்குவதில்லை. 50 சதவீதம் மட்டுமே வழங்குகிறது. தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் காப்பீட்டுத் தொகையை வழங்குவோம் என அரசு பிடிவாதமாக உள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் அரசுமருத்துவமனைகளை இணைக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளை இணைக்க ஏன் மறுக்கிறீர்கள் எனக் கேட்டால், அரசுமருத்துவமனையின் டீன் அதற்கு விண்ணப்பிக்க வேண்டுமென்கின்றனர். காசில்லா மருத்துவம் என்பதை உறுதி செய்ய வேண்டும் பிரீமியத்தை ரூ.150-ஆகக் குறைக்க வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காலத்திலிருந்து ஆஞ்சியோ கிராம் உள்ளிட்ட அனைத்துப் பரிசோதனைக் கட்டணங்களையும் காப்பீட்டு நிறுவனமே முழுமையாக ஏற்க வேண்டும்.
சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய்த்துறை கிராம உதவியாளர்கள், ஊராட்சி எழுத்தர்கள், வனக் காவலர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 வழங்கவேண்டும் என்று கூறினார்.மேலும், ஊதியக்குழு முரண்பாடுகளைக் களைய ஐஏஎஸ் அதிகாரி சித்திக் தலைமையிலான குழு, புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட டி.எஸ்,.ஸ்ரீதர் தலைமையிலான குழு அரசுக்கு அளித்துள்ள அறிக்கைகளைத் தமிழக அரசு இன்னும் வெளியிடவில்லை. அதை உடனடியாக வெளியிட வேண்டும்என்பன உள்ளிட்ட பத்து அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஜனவரி மூன்றாவது வாரத்தில்மாநிலம் தழுவிய பிரச்சாரம் மேற்கொள்வர். பிப்ரவரி 2-ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா நடைபெறும் என்றார். பேட்டியின் போது மாநிலத் துணைத் தலைவர் குரு.சந்திரசேகர் உடனிருந்தார்.