ஜி.கே. மூப்பனார் நினைவு தினம்
பாபநாசம், ஆக. 30- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜி.கே. மூப்பனாரின் 24 ஆவது நினைவுத் தினம் த.மா.கா சார்பில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே அய்யம்பேட்டையில் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஜி.கே. மூப்பனாரின் படத்திற்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு, நலத் திட்ட உதவியாக சைக்கிள், மாணவர்களுக்கு நோட்டு, பேனா, பொதுமக்களுக்கு தென்னங்கன்று, வேட்டி, சேலை, அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் த.மா.கா நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
பருத்தி மறைமுக ஏலம்
பாபநாசம், ஆக. 30- தஞ்சாவூர் விற்பனைக் குழுவின் கீழ் இயங்கி வரும் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் நடந்த பருத்தி மறைமுக ஏலத்தில், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 180 விவசாயிகள், 62 டன் பருத்தி எடுத்து வந்தனர். பண்ருட்டி, செம்பனார்கோவில், கும்பகோணம், கொங்கணாபுரம், ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 8 வணிகர்கள் பருத்தி மறைமுக ஏலத்தில் பங்கேற்று, அதிகபட்சம் ரூ.7,785, குறைந்தபட்சம் ரூ.6,869, சராசரி ரூ.7,416 என நிர்ணயித்தனர். மதிப்பு ரூ.46 லட்சம்.
புதிதாக கட்டப்பட்ட பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை
பாபநாசம், ஆக. 30- தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை - கணபதி அக்ரஹாரம் சாலையில் குடமுருட்டி ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் 70 ஆண்டுகளைக் கடந்தது. இந்தப் பாலத்தின் வழியே ஏராளமான வாகனங்கள் சென்று வரும் நிலையில், இந்தப் பாலம் பழுது என்பதால், அதன் அருகிலேயே புதிய பாலம் கட்டப்பட்டு ஓராண்டு கடந்த பின்னரும், பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது. பழைய பாலத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பழைய பாலம் பழுது என்பதால் கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் செல்ல தடை இருந்தும், வாகனங்கள் சென்று வருகின்றன. பாலம் இடிந்து விழும் முன்பு, புதிதாக கட்டப்பட்ட பாலத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செப்.5 திருச்சி பீமநகரில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக, 30- அமெரிக்க அரசின் அடாவடி வரி விதிப்பு தாக்குதலைக் கண்டித்து, தமிழகத்தில் செப்டம்பர் 5 ஆம் தேதி தொழில் நகரங்களில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்ற முடிவின்படி, திருச்சி மாநகர் மாவட்ட இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் ஆக.29 அன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் க.சுரேஷ் MC தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.லெனின், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சிவா, மாவட்டக்குழு உறுப்பினர் முருகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்-ஏல்) லிபரேசன் மாவட்டச் செயலாளர் ஞானதேசிகன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில், செப்டம்பர் 5-ஆம் தேதி, திருச்சி, பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் அருகே, மாலை 5 மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.