tamilnadu

img

சின்ன வெங்காயம், மக்காச்சோளத்திற்கு மதிப்புக் கூட்டு தொழிற்சாலை துவங்க விவசாயிகள் கோரிக்கை

சின்ன வெங்காயம், மக்காச்சோளத்திற்கு மதிப்புக் கூட்டு தொழிற்சாலை துவங்க  விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூர், ஜூலை 26-  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் ச.அருண்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பின்னர், 12 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.4,24,368 மதிப்பிலான வேளாண் இடுபொருட்கள், வேளாண் கருவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.   இக்கூட்டத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ்  பேசுகையில், அரசின் திட்டங்கள் உரிய காலத்தில் விவசாயிகளுக்கு முழுமையாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  தொடர்ந்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.கே. ராஜேந்திரன் பேசுகையில், கோனேரி ஆற்றுப்பகுதியில் கோழி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் செல்லத்துரை பேசுகையில், சின்ன வெங்காயம் மற்றும் மக்காச்சோளத்திற்கு மதிப்பு கூட்டு தொழிற்சாலை துவங்க வேண்டுமெனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இதன் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.  இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.வடிவேல்பிரபு, வேளாண்மை இணை இயக்குநர் செ.பாபு மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் கலந்து கொண்டனர்.