கிழாய் கிராமத்தில் டிராகன் பழச் செடிகள் சாகுபடி
மயிலாடுதுறை, ஆக. 24- மயிலாடுதுறை அருகேயுள்ள கிழாய் கிராமத்தில் டிராகன் பழ செடிகள் சாகுபடி செய்துவரும் விவசாயியை, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் நேரில் சென்று, பார்வையிட்டு கலந்துரையாடினார். மயிலாடுதுறை வட்டாரம், கிழாய் கிராமத்தை சேர்ந்த பாண்டியன் என்பவர், தனது நிலத்தில் டிராகன் மற்றும் அத்தி பழச்செடிகளை பயிரிட்டு வருவதை, மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்து, இந்த பயிர்களுக்கு இடுபொருட்கள் மற்றும் மானியங்கள் மாவட்ட தோட்டக்கலை மூலம் கிடைக்கப் பெறுகிறதா என்பதையும், அவ்வாறு பெற்ற இடுபொருட்கள் முழுவதுமாக விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்தும் விவசாயியுடன் கலந்துரையாடினார். இதில் கிடைக்கும் பழங்கள் எங்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மகசூல் எவ்வாறு உள்ளது. இதனால் பொருளாதாரம் மேம்படுத்தப்படுகிறதா என்றும் கேட்டறிந்தார். பின்னர், மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடிநீர், கழிவறை, மின்சார வசதிகள் முறையாக உள்ளனவா என்பதனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். மணல்மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்தார். கிழாய் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்த ஆய்வின்போது, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சந்திரகவிதா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.