ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்
புதுக்கோட்டை, செப். 22- புதுக்கோட்டை ரோட்டரி சங்கம் சார்பில், ஏழை மாணவர்களுக்கும், ஆதரவற்ற பெண்ணுக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது. தனியார் பொறியியல் கல்லூரியில் கணினி பொறியியல் முதலாமாண்டு படிக்கும் மாணவர் துளசிராமுக்கு ரூ.18,000 கல்வி உதவி நிதியாகவும், அரசு மருத்துவ கல்லூரி யில் செவிலியர் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு பயிலும் மாணவி மகாலட்சுமிக்கு ரூ.13,000 கல்வி உதவி நிதியாகவும் வழங்கப்பட்டது. மேலும், ஆதரவற்ற பெண் ஒருவருக்கு அவருடைய குடிசை வீட்டை சீரமைக்க ரூ.18,000 நிதி உதவி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எஸ்.இளங்கோ தலைமை வகிகத்தார். ரோட்டரி மண்டல ஒருங்கிணைப்பா ளர் கருணாகரன், சங்கத்தின் செயலாளர் சாகுல் ஹமீது, திட்டத் தலைவர் ஆரோக்கியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர் கோட்டத்தில் அனைத்து அஞ்சலகங்களிலும் ஆயுள் காப்பீடு முகாம்
தஞ்சாவூர், செப். 22- அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு செய்வதற்கான சிறப்பு முகாம்கள், செப்.24 ஆம் தேதி வரை தஞ்சாவூர் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து, தஞ்சாவூர் கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் தங்கமணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “அஞ்சல் ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டிற்கான சிறப்பு முகாம்கள் தஞ்சாவூர் கோட்டத்திலுள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் செப்.24 ஆம் தேதி வரை நடக்கிறது. இந்திய துறையில் ஆயுள் காப்பீட்டு திட்டங்கள் முழுமையாக ஒன்றிய அரசின் உத்தரவாதத்தில் உள்ளது. தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை விட, பொதுமக்களுக்கு குறைவான பிரீமியத்தில் நிறைவான போனஸ் வழங்கி வருகிறது. பங்குச்சந்தை அபாயம் இல்லாதது. மேலும், அஞ்சல் ஆணைகளின் இயக்குநரகமானது அனைத்து ஆயுள் காப்பீடுகளுக்கும், செப்.22 ஆம் தேதி முதல் ஜிஎஸ்டி இல்லை என்று வெளியிட்டுள்ளது. எனவே, அனைத்து காப்பீட்டு திட்டங்களில் இணைந்து இச்சலுகையை பயன்படுத்தி கொள்ளலாம்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கோரிக்கை
பாபநாசம், செப். 22- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாய்கள் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. சாலைகளில், தெருக்களில் நாய்கள் சண்டையிட்டுக் கொள்கின்றன. கார், இருச்சகர வாகனம் உள்ளிட்டவைகளில் செல்பவர்களைத் துரத்துகின்றன. இதனால் விபத்து நேர்கிறது. தோல் வியாதியுள்ள நாய்கள் சுற்றித் திரிவதுடன், சாலையில் உட்கார்ந்துக் கொள்கின்றன. குழந்தைகளால் தெருக்களில் விளையாட முடியாத நிலை உள்ளது. இரவு நேரங்களில் புதிதாக வருபவர்களால் தெருக்களில் நடந்துச் செல்ல முடியவில்லை. பாபநாசத்தில் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்தபடி உள்ளதால், அதைக் கட்டுப்படுத்த பாபநாசம் பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.