tamilnadu

img

மாணவர் சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுத்து அவதூறாக பேசிய மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாணவர் சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுத்து அவதூறாக பேசிய  மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருச்சிராப்பள்ளி, செப். 15-  திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு அறிவியல் துறையில் படிக்கக்கூடிய அஜய் என்ற மாணவரை, வணிகவியல் துறையைச் சேர்ந்த ஆசிரியர் சாலமன் என்பவர், மூன்று நாட்களாக தொடர்ந்து அடித்து தாக்கியுள்ளார்.  அடிக்கும் பொழுது மாணவர் தன்னை தற்காத்துக் கொள்ள தடுக்கும் பொழுது ஆசிரியர் மீது கைபட்டதால், மாணவர் அஜய்க்கு, தலைமையாசிரியர் அப்பள்ளியிலிருந்து மாற்றுச் சான்றிதழ் கொடுத்துள்ளார். அதில் நடத்தை திருப்திகரமானது என்று குறிப்பிட்டுள்ளார். இதனால், பூவாளூர் பள்ளிக்குச் சென்று மாணவரை சேர்க்கும் போது, திருப்திகரமானது வார்த்தை இடம்பெற்றதால், அந்த மாணவருக்கு சேர்க்கையை, அந்த பள்ளி தர மறுத்தது.  இதுகுறித்து மாணவரும், மாணவரின் பெற்றோரும், இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் உதவியோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவிடம் புகார் தெரிவிக்க, முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, மாணவர் சங்க நிர்வாகிகளை சந்திக்க மறுத்தது ஒருமையில் பேசி அலுவலகத்தில் இருந்து வெளியேற்றி உள்ளார் முதன்மைக் கல்வி அலுவலர்.  இதனைக் கண்டித்து இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்த திட்டமிட்டதன் அடிப்படையில், காவல்துறையினர் தலைமையில் பேச்சுவார்த்தை, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலு வலகத்தில் கடந்த 10 ஆம் தேதி நடைபெற்றது.  அப்போது, மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கிருஷ்ணா பிரியா, புகார் தெரிவிக்க வந்த மாணவர் சங்க நிர்வாகிகளை, தன் மீது உள்ள தவறை மறைப்பதற்காக பொய் குற்றச்சாட்டுகளை கூறி னார்.  தொடர்ந்து, மாணவர்களின் கல்விக்கான உரிமைக்காகவும் போராடிக் கொண்டிருக்கும் மாணவர் சங்க நிர்வாகிகளை தகாத முறையில் பேசி, அவதூறு கருத்துக்களைத் தெரிவித்த மாவட்ட கல்வி முதன்மை அலுவலர் கிருஷ்ண பிரியா மீது, துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் வைரவளவன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், மாநிலச் செய லாளர் சம்சீர் அகமது, மாநகர் மாவட்டத் தலைவர் ஜி.கே. மோகன், புறநகர் மாவட்டச் செய லாளர் ஆமோஸ் ஆகியோர் உரை யாற்றினர். பின்னர், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.