tamilnadu

img

சாலையோரப் பள்ளத்தை சீர் செய்து கான்க்ரீட் பாலம் அமைக்க சிபிஎம் கோரிக்கை

சாலையோரப் பள்ளத்தை சீர் செய்து  கான்க்ரீட் பாலம் அமைக்க சிபிஎம் கோரிக்கை

கரூர், ஆக. 22-  கரூர் மாவட்டம் க.பரமத்தி கிராமம் கரூர்-கோவை சாலையில், சேதமடைந்து பெரும் பள்ளமாக உள்ள சாக்கடை கால்வாயின் மீது தரமான கான்க்ரீட் பாலம் அமைத்திட நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று க.பரமத்தி ஊர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றிய குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  க.பரமத்தியில் ஊராட்சி ஒன்றியக் குழு அலுவலகம், அரசு அலுவலகங்கள், பள்ளிகள் உள்ளன. மேலும், க.பரமத்தியைச் சுற்றியுள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள பொதுமக்கள் கடைவீதிக்கும், பேருந்துக்கு செல்வதற்கும் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவ, மாணவிகள், அரசு அலுவலர்கள் வந்து செல்கின்றனர். க.பரமத்தி பேருந்து நிறுத்தம் முதல் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு கடைவீதியில் கரூர் -கோவை தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக  சாலையின் இருபுறமும் புதிய வடிகால் அமைக்கப்படுவதற்கு குழி தோண்டினர். பின்னர், கான்க்ரீட் தளம் அமைத்து அந்த குழிகளை மூடினர். பேருந்து நிறுத்த நிழற்குடை முன்பும், ராஜபுரம் பிரிவு ரோடு ஆகிய பகுதிகளில் வடிகால் கால்வாயின் மீது போடப்பட்ட கான்க்ரீட் பாலத்தின் மீது, பல டன் எடையுள்ள டாரஸ் லாரிகள், கிரசர்களில் இருந்து ஜல்லி ஏற்றிச் செல்வதால், தரமற்ற கான்க்ரீட் பாலம் முற்றிலும் சேதமடைந்து பெரும் பள்ளமாக உள்ளது. அந்த பள்ளத்தை தடுப்புகள் வைத்து மூடி உள்ளனர்.  இரண்டு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள், இந்த குழியில் விழுந்து விபத்துக்கள் நடக்காமல் தடுக்க வேண்டும். அதேபோல், பேருந்து நிறுத்த நிழற்குடை முன்பு உள்ள பள்ளம் திறந்தே உள்ளது. பேருந்துக்காக செல்பவர்கள் கவனக் குறைவாக அந்த பள்ளத்திற்குள் தடுமாறி விழும் சூழல் உள்ளது.  எனவே பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு க.பரமத்தி பேருந்து நிறுத்த நிழற்குடை முன்பும், ராஜபுரம் பிரிவு ரோடு ஆகிய பகுதியிலும்  சேதமடைந்து பெரும் பள்ளமாக உள்ள சாக்கடை கால்வாயின் மீது தரமான கான்க்ரீட் பாலம் அமைத்து நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று க.பரமத்தி ஊர் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக் குழு சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.  போர்க்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றியக் குழு சார்பில், பொதுமக்களைத் திரட்டி தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் கே.கந்தசாமி, ஒன்றியச் செயலாளர் குமாரசாமி ஆகியோர் தெரிவித்தனர்.