தேங்காய் எண்ணெய் விலை வரலாறு காணாத உயர்வு!
சென்னை, ஜூலை 3 - நாடு முழுவதும் தேங்காய் எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் லிட்டருக்கு ரூ. 160 வரையிலும், கிலோவுக்கு ரூ. 180 வரை யிலும் உயர்ந்துள்ளது. அதாவது, கடந்த மே மாதம் தொடக்க த்தில் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் ரூ. 234-க்கும், ஒரு கிலோ ரூ. 260-க்கும் விற்பனை ஆனது. அதுவே தற்போது, ஒரு லிட்டர் ரூ. 396-க்கும், ஒரு கிலோ ரூ. 440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகளாவிய தேவை அதிகரிப்பு மற்றும் கொப்பரை (உலர்ந்த தேங்காய்) விலை உயர்வு உள்ளிட்ட பல காரணிகளால் தேங்காய் எண்ணெய் விலைகள் அதிகரித்து வருகின்றன. பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா போன்ற கொப்பரைத் தேங்காய் சாகுபடி நாடுகளில் விளைச்சல் குறைவு, அதேநேரம் சீனா உள்ளிட்ட நாடுகளின் தேவை அதிகரிப்பு ஆகியவை விலைகளை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த உலகளாவிய போக்குகள் இந்திய தேங்காய் எண்ணெய் சந்தையையும் கணிசமாக பாதித்து வருவதால், அது விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளது.