பெண் அதிகாரி அவமதிப்பு வழக்கு வேளாண் அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவு
சென்னை, ஜூலை 20 - பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்த பெண் வேளாண் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்த வேளாண் துறை அதிகாரிகள் மீதான அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. காஞ்சிபுரம் வேளாண் வர்த்தக பிரிவு அதிகாரியாக பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர், “2022-ஆம் ஆண்டு தன்னை உதவி வேளாண் அதிகாரியும், துணை இயக்குநரும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்திருந்தார். அந்த புகார் மீது உரிய உள் விசாரணைக்குழு அமைத்து விசாரிக்க வில்லை” எனக்கூறி அந்த பெண் அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் உள் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில் பாலியல் புகார் அளித்த பெண் அதிகாரி, அரசுக்கு எதி ரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறி, அவருக்கு எதிராக சார்ஜ் மெமோ பிறப்பிக்கப்பட்டது. மேலும் அவர் காஞ்சிபுரத்தில் இருந்து சென்னைக்கு இட மாறுதல் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அந்த அதிகாரி தொடர்ந்த வழக்கை விசாரித்த உயர் நீதி மன்றம், பாலியல் புகார் அளித்த பெண் அதிகாரி மீது துறை ரீதியிலான விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்திருந்தது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் இந்த தடை உத்தரவை மீறி, தனக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான விசாரணையை அதிகாரிகள் தொடர்ந்து வருவதாகக் கூறி அந்த பெண் அதிகாரி உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், வேளாண் வணிக பிரிவு ஆணையரும், வேளாண் துணை இயக்குந ரும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உள்ளார்.