tamilnadu

img

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.கவினர் ஏன் ஜேஎன்யூவிற்கும், சமூக அறிவியலுக்கும் எதிராக நிற்கிறார்கள்? - காஞ்சா அய்லய்யா

முகமூடி அணிந்து கொண்டு ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) வளாகத்திற்குள்  நுழைந்து அங்கிருந்தவர்களைத்  தாக்குவதற்காக  சுதந்திரமாக அனுமதிக்கப்பட்டவர்களும், அந்த தாக்குதலில்  காயமடைந்த ஆசிரியர்களும், மாணவர்களும்  பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி டெல்லியில்  எழுதியிருக்கும் புதிய கதையை நமக்குச் சொல்கிறார்கள்.  ஜே.என்.யூவையும், நாட்டில் உள்ள வேறு சில பல்கலைக்கழகங்களையும் முடிவிற்கு கொண்டு வரவே பாரதிய ஜனதா கட்சியினர்  விரும்புகின்றனர்.  சமூக அறிவியல் படிப்புகளைத் தீவிரமாக கற்பித்து வருகின்ற பல்கலைக்கழகங்களை ராஸ்ட்ரிய சுயம் சேவக் சங்கமும் (ஆர்.எஸ்.எஸ்), பாரதிய ஜனதா கட்சியும் (பா.ஜ.க)  மிகமுக்கிய பிரச்சினைகளாக கருதுகின்றன. 
இந்த தாக்குதலில் மாணவர் சங்கத் தலைவர் ஆயிஷே கோஷ் உடன் சில ஆசிரியர்கள் என்று சுமார் 35 பேர் காயமடைந்தனர்.  ஏராளமான எண்ணிக்கையில் முகமூடி அணிந்தவர்கள் ஜே.என்.யூ வளாகத்திற்குள் நுழைந்த விதம், புதிய அறிவை உருவாக்குவதற்கும், இந்திய மக்களின் வாழ்வை  மாற்றுவதற்கும் பல்கலைக்கழகங்களுக்குள் செயல்பட்டு வருகின்ற கல்விக்கு எதிரான நேரடி தாக்குதல்களின் புதிய கதையைச் சொல்கிறது.  பாரம்பரிய நம்பிக்கைகளுக்கெதிராகவும், மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் சமத்துவக் கருத்துக்களை உருவாக்குவதாகவும் இருக்கின்ற  பகுத்தறிவு நிறைந்த சமூக அறிவியல் அறிவை அனுமதிக்காத முஸ்லீம் நாடுகளின் வழிகளிலே இவர்கள் உருவாக்க விரும்புகின்ற ஹிந்து ராஸ்ட்ரமும் செல்வது தெரிகிறது. இந்த உலகில் அரசியல் ஜனநாயகம் ஒரு அமைப்பாகத் தோன்றுவதற்கு முன்னர்,  கல்வியின்  மிகமுக்கிய கட்டமைப்புகளாக  பல்கலைக்கழகங்கள் ஒருபோதும் இருந்ததில்லை.  ஆனாலும் இந்த பல்கலைக்கழகங்களின் மூலமாகவே  மக்களுக்கான உரிமைகள், தேர்தல்கள், நவீன சந்தைகள், புதிய கலாச்சார தளங்கள்  மனித வாழ்க்கைக்குள்  வந்து சேர்ந்தன.  பல்கலைக்கழகங்களே உலகின் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்த பல்வேறு மக்களின் அறிவு வளங்களை  ஒருங்கிணைத்தன. இந்திய  பல்கலைக்கழக கல்வி என்பது மிகவும் நவீனமானது. ஒப்பீட்டளவில் மிகவும்  சமீபத்தியது. ஆதிவாசிகள், தலித்துகள், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்,  உயர் சூத்திர விவசாயிகளின் வாழ்வின் அனைத்து பகுதிகளிலிருந்து கிடைக்கின்ற புதிய அறிவு வளங்களை அவை இன்னும் திரட்டவில்லை. இதுவரை அங்கே நடந்திருக்கும் ஆய்வுகள்  பெரும்பாலும் மேற்குலகு சார்ந்தவைையாக அல்லது புராணங்களை மையமாகக் கொண்டவையாக மட்டுமே இருக்கின்றன.  உற்பத்தி சாதியைச் சார்ந்த குழந்தைகள் ஜே.என்.யூ  போன்ற பல்கலைக்கழகங்களுக்குள் நுழையும் போது இந்த நிலை மாறக் கூடும். 
நாளந்தா பல்கலைக்கழகத்தைப் பற்றி  பேசும்போது, அது இந்தியாவின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் என்று  நாம் பேசினாலும், மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும், மதச்சார்பற்ற கருத்துக்களை அணிதிரட்டுதல் மற்றும் இளைஞர்களுக்கு அவற்றைக் கற்பித்தல் போன்றவற்றைச் செயது வருகின்ற தற்போதைய பல்கலைக்கழகங்களைப் போன்றதொரு பெரிய பல்கலைக்கழகமாக அது இருந்ததில்லை. இந்தியாவில் நவீன கல்வி குறித்த நோக்கத்துடன் கூடிய முதல் நவீன பல்கலைக்கழகம்  1857ஆம் ஆண்டில் தான் மெட்ராஸில்  நிறுவப்பட்டது. அதாவது இந்தியாவிற்கென்று 163 ஆண்டு கால அளவிலான பல்கலைக்கழக கல்வி வரலாறு மட்டுமே நம்மிடம் உள்ளது.    தீவிரமான உள்நாட்டு அறிவை உருவாக்காமல்  பெரும்பாலும் பல்கலைக்கழகங்கள் இன்றுவரையிலும் பிராமணமாகவே இருந்து வந்திருக்கின்றன. அது இப்போது மெதுவாக மாறி வருகிறது. தற்போது வரை இந்தியாவில் உள்ள 689 முறையான பல்கலைக்கழகங்களில்
மிகச் சிறந்ததாக  ஜே.என்.யூ திகழ்கிறது. ராஸ்ட்ரிய சுயம் சேவக் சங்கமும் பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களும் இதை நன்கு அறிந்தே இருக்கிறார்கள். சமூக அறிவியலில் ஜே.என்.யூ பெற்றிருக்கும் நற்பெயர் மிகவும் பிரபலமானது. 1970களின் முற்பகுதியில்தான் அது நிறுவப்பட்டிருந்தாலும், மிகச்சிறந்த சமூக அறிவியல் அறிஞர்கள், தலைவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்களை ஏராளமாக உருவாக்கியுள்ளது.  தரமான கல்வியின் காரணமாக , குறிப்பாக சமூக அறிவியலில் அதிகத் தரத்துடன் இருப்பதால்  இந்த பல்கலைக்கழகம் மிகவும் ஆபத்தானது என்று ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.கவினர்  கருதுகிறார்கள். எனவேதான் அதை கம்யூனிஸ்ட் என்று அவர்கள் வகைப்படுத்துகிறார்கள். 
நாட்டில் சமூக அறிவியல் பயில விரும்பும் மாணவர் எவரும் ஜே.என்.யூவில் சேரவே விரும்புகிறார்கள். பல்கலைக்கழகத்திடம் உள்ள  இந்த வலுவான சமூக அறிவியல் தளமே ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.கவினரின் பிராமணியத்தை கவலையடையச் செய்கிறது.  அங்கே சேர்வதற்காக விண்ணப்பித்து வெற்றி பெற முடியாதவர்களில் ஒருவனாகவே நானும் இருந்தேன். 1976 ஆம் ஆண்டில், ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகத்தில்  நான் எம்.ஏ. இறுதி ஆண்டில்  இருந்த போது, ​​எம்ஃபில் பயில பெரிதும்  விரும்பப்படுகின்ற பல்கலைக்கழகமாக ஜே.என்.யூ இருந்தது. பிஎச்.டியில் ஆர்வம் உள்ளவர்கள் அங்கே நுழைவது குறித்த கனவுடன் அப்போது இருப்பார்கள். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்காக,  கடன் வாங்கி என் வாழ்க்கையில் முதன்முறையாக நான் டெல்லிக்குச் சென்றேன். உயர் சாதி பணக்காரர்கள் ஆக்ஸ்போர்டு அல்லது ஹார்வர்டுக்கு செல்வதற்காக செய்வதை விட ஜே.என்.யூவிற்குச் செல்வதற்கு நான் அதிக முயற்சிகளைச் செய்ய வேண்டியிருந்தது. இருப்பினும், என்னால் அந்த வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள  முடியவில்லை. ஜே.என்.யூவில் அனுமதி கிடைக்காததால் என் வாழ்க்கையில் நிறைய தவற விட்டு விட்டதாகவே நான் கருதினேன். இன்றைக்கும்   தீவிர வாசிப்பு, விவாதங்கள் மற்றும் உலகளாவிய புகழ் பெற்றவர்களுடன்  தொடர்பு கொள்வது போன்ற விஷயங்களில் ஜே.என்.யூவைப் போல வேறு எந்த பல்கலைக்கழகமும் இருப்பதில்லை. அதனால்தான் மதத்தைப் பற்றி குறிப்பாக ஹிந்து  சமய நூலறிவு குறித்த எந்தக் கருத்தும் இல்லாத இந்தப் பல்கலைக்கழகத்தை  கம்யூனிச பல்கலைக்கழகம் என்று  ஆர்.எஸ்.எஸ் / பாஜகவினர் கருத்து கொண்டுள்ளனர்.  இவர்களுடைய  எதிர்காலத்திற்கு மிகவும்  ஆபத்தானதாக  ஜே.என்.யூவிடம் உள்ள சமூக அறிவியல் கலாச்சாரம்  இருக்கிறது.  மத்திய கிழக்கு இஸ்லாமிய  நாடுகளில் இருக்கும் பல முஸ்லீம் தலைவர்களும்  பல்கலைக்கழக கல்வி குறித்து  இதுபோன்றே 
சிந்திப்பவர்களாக இருப்பதால்,  அவர்களும் மதத்திற்கு அப்பாற்பட்டு சமூக அமைப்புகள் பற்றிய அறிவைத் திரட்டுகின்ற வகையில்  பல்கலைக்கழக கட்டமைப்புகளை  உருவாக்கவில்லை. மத்திய கிழக்கில் உள்ள பல முஸ்லீம் தலைவர்களும் சமூக அறிவியல் ஆய்வுகளை கம்யூனிச இயல்புடையவை என்றே கருதுகிறார்கள். தேசம் பற்றிய கருத்தும்,  மனிதர்களை சிறப்பாக ஒருங்கமைத்து முன்பு இருந்ததை விட சிறந்த வாழ்க்கையை அவர்கள் பெறுவது என்பது பல்கலைக்கழக கல்வியின் மூலமே கிடைத்தது என்ற கருத்தும் ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க தலைவர்களுக்குப் புரியாதது.  மனித வாழ்க்கைத் தரத்தை  மேம்படுத்தும் வகையிலான மதம் மற்றும் மதச்சார்பற்ற ஆய்வுகள்  பல்கலைக்கழகங்களிலேயே உருவாகின. இயந்திரம், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவக் கல்வி கற்றவர்கள் அறிவியல் தொடர்பான கருவிகளை மனித அமைப்பிற்குப் பயன்படுத்தாமல் மத நடைமுறைகளையே பின்பற்றுவதால்  அவர்கள் அந்த கல்வியே  போதுமானது என்று   நினைக்கிறார்கள்.  சமூக அறிவியல் ஆய்வுகளை நடத்துவதின் மூலம்  பல்கலைக்கழகங்கள்  மனித அமைப்பின் கட்டமைப்புகளை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாறான தீவிரமான சமூக அறிவியல் ஆய்வு மற்றும் கல்வி இருந்திராவிட்டால், எந்தவொரு தேசமும், அரசியல் நிறுவனங்களும், ஊடக கட்டமைப்புகளும், மருத்துவம் மற்றும் பொறியியல் நிறுவனங்களும் வளர்ந்திருக்கவே முடியாது. 
தலைசிறந்த ஐரோப்பிய சிந்தனையாளர்கள் பலரும் சமூக அறிவியல் ஆய்வுகளில் பெரும் போராட்டத்தை நடத்தியே இன்று நம்மால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள பல சிந்தனைகளை  உருவாக்கி இருக்கின்றனர். மத நூல்கள், உற்பத்தி முறைகள், மத நூல்களில் இருந்து நமக்கு கிடைக்கின்ற மனித ஆளுமைகளின் கதைகள் மற்றும் வாழ்வு ஆகியவற்றை மிகவும் தீவிரமான முறையில் நேர்மறையான அணுகுமுறையுடன் அவர்கள் விளக்கியுள்ளனர்.  இத்தகைய அணுகுமுறை நேர்மறையாக்கம்  என்று அழைக்கப்படுகிறது. உதாரணமாக, 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில்  G.W.F. ஹெகல் என்ற முக்கியமான சிந்தனையாளர் இயேசுவைப் பற்றி 'இயேசுவின் வாழ்க்கை' என்ற புத்தகத்தை எழுதினார். அதில் அவர் வேறு எந்த இறையியலாளராலும் வர முடியாத,  இயேசுவின் போதனையிலிருந்து வேறுபட்ட முடிவிற்கு வந்தார். ஹெகலின் கூற்றுப்படி, குருட்டு நம்பிக்கையிலிருந்து பகுத்தறிவு என்ற கருத்து விலகிச் செல்வதற்கு  இயேசு கிறிஸ்து காரணமாக இருந்தார்.  தேவனுடைய ராஜ்யத்தில் ஆன்மீக குடியுரிமை பற்றிய சிந்தனையையும் இயேசுதான் கட்டியெழுப்பினார். ஹெகலின் ஆன்மா குறித்த அடிப்படைக் கோட்பாடு இயேசுவின் போதனையிலிருந்தே எடுக்கப்பட்டது. 
"ஒரு மனிதனாக, முற்றிலும் புத்திசாலித்தனமானவனாக மனிதன் இல்லை. இன்பங்களுக்கான  தூண்டுதல்களுடன் அவன் தன்னை இயல்பாகவே சுருக்கிக் கொண்டவன் இல்லை.  அவனுக்கும் ஆன்மா இருக்கிறது; பகுத்தறிவாளனாக தெய்வீக சாரத்தின் தீப்பொறியை  தனது பரம்பரை உரிமையாக அவன் பெற்றிருந்தான். இயேசுவின் இந்த சிந்தனைகளிலிருந்தே ஹெகல் தனது பகுத்தறிவு, ஆன்மா மற்றும் இயங்கியல் கோட்பாட்டை உருவாக்கினார். இந்திய புராண / இறையியல் நூல்களுக்கு மறு விளக்கம் அளிக்க வல்ல அறிஞர்களை இந்திய பல்கலைக்கழகங்கள் இதுவரை உருவாக்கவில்லை என்பது உண்மைதான். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மட்டுமே அதைச் செய்தார். ஆர்.எஸ்.எஸ் / பாஜக தலைவர்களும், அறிஞர்களும் இதனுடன் உடன்படவில்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார். மனு மற்றும் அது தொடர்பான எழுத்துக்கள் பற்றிய அவரது மதிப்பீடு அவர்களுடைய புரிதலுக்கு எதிரானது. எந்தவொரு கம்யூனிச பிராமண அறிஞரும் பண்டைய இந்தியாவின் பிராமண பாரம்பரியத்தைப் பற்றி அத்தகைய முடிவுக்கு வரவில்லை.  அம்பேத்கர் போன்ற பல அறிஞர்கள்  பல்கலைக்கழகங்களின் சமூக அறிவியல் துறைகளிலிருந்து வெளிவர வாய்ப்புள்ளது. அவர்களைப் பொறுத்தவரை இது  கவலைக்குரிய சூழ்நிலையாகும். 
மகாத்மா காந்தி, வி.டி.சாவர்க்கர் ஆகியோர் அதே நூல்களிலிருந்து,  அம்பேத்கரைப் போலல்லாமல் வேறுபட்ட முடிவுகளுக்கு வந்தனர்.  இவர்கள் இருவரும் அம்பேத்கரைப் போன்று சமூக அறிவியலாளர்கள் அல்ல. இருப்பினும், காந்தி தனது சொந்த ஆய்வுகளிலிருந்து அகிம்சையைத் தேர்ந்தெடுத்தார். சாவர்க்கரோ மிகுந்த வன்முறை நிறைந்த பாடத்தை தேர்ந்தெடுத்தார்.  அவர்கள் இருவரும் அரசியல் அறிவியல், பொருளாதாரம் அல்லது சமூகவியல் படிக்காமல், லண்டனில்  சட்டத்தைப் படித்தவர்களாக இருந்த போதிலும் தங்களுக்குள் தீவிரமாக வேறுபடுகிறார்கள்.  இந்த நாட்களில் பல செல்வந்தர்கள் மற்றும் உயர் சாதி இளைஞர்கள் தங்கள் சித்தாந்தங்களைப் பாதுகாக்கும் வகையில் சமூக அறிவியல் ஆய்வுகளின் பக்கம் செல்லவில்லை என்பதே ஆர்.எஸ்.எஸ் / பா.ஜ.க.வினரின் கடுமையான அச்சங்களில் ஒன்றாக உள்ளது.  சமூக அறிவியல் ஆய்வுகள் இப்போது சூத்திர / இதர பிற்படுத்தப்பட்ட / தலித் / ஆதிவாசி இளைஞர்களின் கோட்டையாக மாறி விட்டன. சமூக அறிவியல் படிப்புகளைத் தீவிரமாகப் படிப்பவர்கள் அனைவரும், அவர்கள் ஹிந்து சமய நூல்களைப் படித்தாலும், அம்பேத்கர் வந்த அதே முடிவுக்கு வரக்கூடும் என்று அவர்கள் நினைப்பதாகவே தோன்றுகிறது. இதன் காரணமாகவே குறிப்பாக ஜே.என்.யூ போன்ற  பல்கலைக்கழகங்களில் சமூக அறிவியல் உயர் கல்வியை ரத்து செய்வது அவர்களின் முன்னுரிமையாகி விட்டது. ஆனால் அத்தகைய  அனுமானம் சமூக அறிவியல் மீது அவர்கள் கொண்டிருக்கும் தவறான கருத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. முஸ்லீம் முல்லாக்களிடமும் சமூக அறிவியல் ஆய்வுகள் பற்றி இவ்வாறான  ஒத்த புரிதலே இருக்கிறது. குர்ஆன் குறித்த பகுத்தறிவு சார்ந்த ஆய்வுகள் சிக்கல்களுக்கே வழிவகுக்கும் என்று அவர்களும் நினைக்கிறார்கள்.
ஆனால் மத நூல்களை சமூகவியல் கண்ணோட்டத்துடன் தீவிரமாக ஆய்வு செய்யும் போது புதிய விளக்கங்கள் ஏராளமாக வெளிவரும்,  அவை ‘சமூக பகுத்தறிவை’ அதிகரிக்கும் என்பது அவர்களுக்கு புரியாததாக இருக்கிறது.  இந்த சமூக பகுத்தறிவுதான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அறிவை முன்னேற்றுகிறது. இத்தகைய தீவிரமான சமூக அறிவியல் ஆய்வுகள் மேற்குலகில் கிறிஸ்தவத்தை ஒழிக்க வழிவகுக்கவில்லை என்பதும் அங்கு பைபிள் மற்றும் கிறிஸ்தவ வரலாற்றை அவை மிகவும் தீவிரமாக ஆய்வு செய்தன என்பதும் குறிப்பிடத்தக்கது. 
ஜே.என்.யூ ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது அண்மையில் நடத்தப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதல் இந்திய பல்கலைக்கழக கல்வியை பண்டைய காலத்திற்கு இட்டுச்செல்லும்  நோக்கத்தில் செய்யப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. வெகுஜன வாக்குகள் இத்தகைய பல்கலைக்கழகப் போராட்டங்களைச் சார்ந்தவையாக இருக்கவில்லை என்ற வலுவான பார்வை ஆர்.எஸ்.எஸ் / பாஜக தலைவர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் பல்கலைக்கழகங்களில் உள்ள ஜனநாயகம் சரிந்தவுடன், பொருளாதாரம் மற்றும்  இந்திய நவீன சமூக அமைப்பு முழுமையும் சரிந்து விடும்.  மத்திய கிழக்கு நாடுகள் பலவற்றில் இருப்பதைப் போல நாமும் இடைக்காலத்திற்குச் சென்று சர்வாதிகாரத்தை அடைவோம்.  

https://countercurrents.org/2020/01/why-rss-bjp-hate-jnu-and-social-sciences

தமிழில்: முனைவர் தா.சந்திரகுரு விருதுநகர்

;