tamilnadu

img

போராடும் சிபிஎம் ஊழியர்கள் கடும் சித்ரவதை - யோகி அரசு அராஜகம்

நாடு முழுதும் மக்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள அமைதியான எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு எதிராக, உத்தரப்பிரதேசத்திலும், பாஜக ஆளும் மாநிலங்களிலும் மற்றும் மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லியிலும் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான முறையில் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளை ஏவியதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலைமைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

உத்தரப்பிரதேசத்தில் கிளர்ச்சிப் போராட்டத்தின்போது இறந்தவர்களின் எண்ணிக்கை 18ஐ எட்டியிருக்கிறது. இறந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பனாரஸ் மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட இடதுசாரிக் கட்சிகளைச் சேர்ந்த 69 ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 56 பேர் இப்போதும் காவல் அடைப்பில் இருந்து வருகிறார்கள். நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால் அவர்களை வெளிக்கொணர்வதற்குச் சட்டப்படி பரிகாரம் காண்பதற்கான வாய்ப்புகள் 2020 ஜனவரி வரை இல்லாமல் மூடப்பட்டிருக்கிறது.

காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளை ஊடகங்களில் சில வெளிக்கொணர்ந்திருக்கின்றன. உத்தரப்பிரதேசத்தில் காவல்துறையினர் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனத்தை கீழே குறிப்பிட்டுள்ள ஊடகங்கள் அடிக்குறிப்புகளுடன் ஒளிபரப்பின/வெளியிட்டுள்ளன.

https://indianexpress.com/article/india/report-on-amu-violence-cops-raised-jai-shri-ram-slogans-admin-failed-in-its-duty/;    

https://www.ndtv.com/india-news/citizenship-amendment-act-video-shows-cops-vandalising-shops-vehicles-in-ups-kanpur-amid-protests2154193?fb;   

https://m.facebook.com/story.php?story_fbid=1617669225066926&id=315252535308608 ; 

https://m.facebook.com/story.php?story_fbid=10158275276070798&id=102527030797 ; https://khabar.ndtv.com/video/show/prime-time/shocking-report-of-police-vandalism-from-up-536043

உத்தரப்பிரதேச மாநில அரசாங்கம், இறந்தவர்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் இழப்பீடு அறிவிப்பதற்குப் பதிலாக, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த கிளர்ச்சியாளர்களிடமிருந்து நஷ்டஈட்டுத்தொகை வசூலிக்கப்படும் என்று முதலமைச்சர் உட்பட அரசுத்தரப்பில் மிகவும் மூர்க்கத்தனமானமுறையில் பிரச்சாரம் தொடங்கப்பட்டிருக்கிறது. மேலே காட்டப்பட்டுள்ள காணொளிகளின் ஒளிப்பதிவுகளிலிருந்து, சேதத்தை ஏற்படுத்தியது காவல்துறையினர் என்பதும், ஆனால் அமைதியாகக் கிளர்ச்சி செய்தவர்கள் மீது பழி சுமத்தப்படுகிறது என்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஜமியா மிலியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட நாச வேலைகள் மிகவும் விரிவான அளவில் பதிவு செய்யப்பட்டு, காட்டப்பட்டிருக்கின்றன.
உத்தரப்பிரதேச நிலைமை, பாஜக-வினால் முடுக்கிவிடப்பட்டுள்ள மதவெறி நடவடிக்கைகளை மிகவும் அசிங்கமான முறையில் வெளி உலகத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின்கீழ் பதவிப் பிரமாணம் எடுத்தக் கொண்ட அமைச்சர்கள் உட்பட பாஜக தலைவர்கள், “கோத்ரா போன்ற நிலைமை” மீண்டும் மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்கிறார்கள். இத்தகைய இவர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு இரையாகிவிட வேண்டாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களைக் கேட்டுக் கொள்கிறது.
உத்தரப்பிரதேச அரசாங்கம், இக்கிளர்ச்சிகளை முஸ்லீம்கள் மட்டுமே செய்தார்கள் என்று மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை என்னவெனில், நம் அரசமைப்புச்சட்டத்தை மனதில் கொண்டுள்ள இந்தியர்கள் அனைவரும் மத வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு அமைதிக் கிளர்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். பனாரஸில் கைது செய்யப்பட்டுள்ள 69 முன்னணி ஊழியர்களில் 13 பேர் மட்டுமே முஸ்லீம்கள். 56 பேர் முஸ்லீம் அல்லாதவர்கள்.
உத்தரப்பிரதேசத்தில் இடதுசாரிக் கட்சிகள் டிசம்பர் 30 அன்று அனைத்து மாவட்டத் தலைநகர்களிலும் எதிர்ப்பு தினம் அனுசரித்திடத் தீர்மானித்திருக்கின்றன. அமைதியான இக்கிளர்ச்சிகளில் இதரர்களும் இணைந்து கொள்ள வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.
கர்நாடகாவில், மங்களூருவில் இருவரைக் காவல்துறையினர் சுட்டுள்ளனர். ஆர்எஸ்எஸ்/பாஜக ஊழியர்கள் பெங்களூருவில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்கி, எரித்து நாசப்படுத்தியுள்ளனர். 
திரிபுராவில் பல இடங்களில், பாஜக மாநில அரசாங்கம் அமைதியாகக் கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. பெலோனியா, உதய்பூர் மற்றும் சில இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். 
குஜராத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் அருண் மேத்தா கைது செய்யப்பட்டு, காவல்நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊழியர்களைக் கைது செய்வது தொடர்கிறது.
அமைதியான முறையில் கூட்டம் கூடுவதற்கான உரிமையும், எதிர்ப்புக் கிளர்ச்சிகள் மேற்கொள்வதற்கான உரிமையும் இந்திய அரசமைப்புச் சட்டத்தால் உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கிறது. இவ்வுரிமைகளின் மீது இன்றைய தினம் பாஜக கருணையற்ற முறையில் தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய எதேச்சாதிகார அட்டூழியங்களை இந்திய மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள். இந்திய மக்கள் இதற்கு முன்பு 1970களில் தங்களுக்கு எதிராக ஏவப்பட்ட எதேச்சாதிகாரத் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி முறியடித்து, ஜனநாயகத்தை மீட்டெடுத்திருக்கிறார்கள். இப்போதும் அதேபோன்று அமைதியான கிளர்ச்சிகள் மூலமாக ஜனநாயகம் மீட்டெடுக்கப்படும்.

நாட்டுப்பற்று மிகுந்த ஒவ்வொருவருக்கும், இருப்பது ஒரேயொரு “புத்தகம்”தான். அது இந்திய அரசமைப்புச் சட்டம். குடியுரிமைத் திருத்தச் சட்டம்/தேசியக் குடிமக்கள் பதிவேடு/தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றின் மூலமாக அரசமைப்புச் சட்டத்தின் அடித்தளங்களையும், மதச்சார்பற்ற ஜனநாயக விழுமியங்களையும் மீறுவதற்கு ஆட்சியாளர்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளிலிருந்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதே, உச்சபட்ச நாட்டுப்பற்றாகும். நம்முடைய அரசமைப்புச் சட்டத்தையும் அதன் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களையும் பாதுகாத்திடுவதற்கான அமைதிக் கிளர்ச்சிகள் தொடரும்.
பிரிட்டிஷ் ஆட்சி, விடுதலைப் போராட்டக் காலத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட்டு கட்சியைத் தடை செய்திருந்தது. நம் தோழர்கள்மீது எண்ணற்ற தாக்குதல்களைத் தொடுத்தது. அவற்றையெல்லாம் வீரத்துடன் எதிர்த்து நின்று, முறியடித்துத்தான் முன்னேறியிருக்கிறோம். சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி, வீரஞ் செறிந்த போராட்டங்களில் எண்ணற்ற தியாகிகளைப் பெற்ற ஒளிமயமான அத்தியாயத்தை நாட்டின் வரலாற்றில் நாம் பெற்றிருக்கிறோம்.
அமைதியான முறையில் கிளர்ச்சிகளைத் தொடருமாறும், ஆட்சியாளர்களின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு இரையாகிவிட வேண்டாம் என்றும் மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு வேண்டுகோள் விடுக்கிறது.
இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.

(ந.நி.)

;