தருமபுரி:
பாலக்கோடு அருகே விவசாயியை கொன்று எரித்து புதைத்த வழக்கில் மனைவி, மாமனார் உள்பட ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே சக்கிலிநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன்(46). இவருடைய மனைவி முனியம்மாள் (40). இவர்களுக்கு மணி (25), சபரி (23) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறு காரணமாக முனியம்மாள் கோபித்துக்கொண்டு ஈச்சம்பள்ளத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனிடையே, ஐயப்பன் கடந்த 7ஆம் தேதி மாமியார் வீட்டிற்குச் சென்று மனைவியை அழைத்து வருவதாக மகனிடம் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது மகன்கள், காவல்துறையில் புகார் செய்தனர்.
இந்நிலையில் சக்கிலிநத்தம் அருகே உள்ள முகுடு மடுவு வனப்பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக மாரண்டஅள்ளி காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த காவல் துறையினர் தூர்நாற்றம் வீசிய இடத்தைத் தோண்டி பார்த்தபோது, தீ வைத்து எரிக்கப்பட்டு, அழுகிய நிலையில் ஆண் ஒருவர் உடல் கிடப்பது தெரியவந்தது.இதுகுறித்து காவல் துறையினர் அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது எரிந்த நிலையில் இருந்தது ஐயப் பன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவருடைய உடலை மீட்ட காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் காவல் துறையினர் நடத்தி வந்த நிலையில் விசாரணையில் ஐயப்பனின் மனைவி, உறவினர் மீது சந்தேகம் வந்துள் ளது. இதனால், முனியம்மாள்(40), மாமனார் புட்டப்பன்(70), உறவினர்கள் தங்கவேல் (35), சின்னசாமி(42), மாதையன்(38) ஆகிய ஐந்து பேரை கொலை வழக்கு தொடர்பாக மாரண்டஅள்ளி காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.