விழுப்புரத்தில் எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வருமா?
விழுப்புரத்தில் கட்டி முடித்து 3 ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராத எரிவாயு தகன மேடை மற்றும் கரும காரிய கூடம் ஆகியவை பயன்பாட்டுக்கு வருமா என்று அப்பகுதி மக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது. விழுப்புரம் நகராட்சியில் மகாராஜபுரம், லட்சுமி நகர், ஆசிரியர் நகர், கம்பன் நகர், தேவநாதசாமி நகர்,காகுப்பம் பாதை, தாமரைக்குளம் உள்ளிட்ட விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர்களில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடலை மகாராஜபுரம் சகாதேவன்-2 நகர் பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு எடுத்துவந்து அங்கு வைத்து தகனம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் மழைக் காலங்களில் சுடுகாட்டில் வைத்து உடலை எரிப்பதில் மிகவும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டு வருகிறது, இந்நிலையில் அப்பகுதிமக்கள், தங்கள் பகுதியில் எரிவாயு தகன மேடை அமைத்துத்தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதையடுத்து விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2021-22-ம் ஆண்டு ரூ.1 கோடியே 30 லட்சம் மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை கட்டிடம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 3 ஆண்டுகளாகியும், இதுநாள் வரையிலும் அந்த கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமலேயே இருந்து வருகிறது. இதனால் இறந்தவர்களின் உடல்களை, வெகுதூரம் இறுதி ஊர்வலமாக கொண்டு வந்து விழுப்புரம் கே.கே.சாலையில் உள்ள எரிவாயு தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இவ்வாறு விழுப்புரம்-புதுச் சேரி சாலை பகுதியில் இருந்து கே.கே.சாலைக்கு இறந்தவர்களின் உடலை ஊர்வலமாக எடுத்து வருவதால் நகரில் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எப்போது பயன்பாட்டுக்கு வரும்? மக்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வந்த நிலையில் தற்போது பயன்பாட்டுக்கு வராமல் புதர்மண்டி காணப்படும் இந்த எரிவாயு தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டுவர சிற்சில பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது, ஆனால் அந்த பணிகள் வேகம் இல்லாமல் மந்தமாக நடைபெற்று வருகிறது, மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. உடனடியாக பணிகள் முடித்த்து எரிவாயு தகனமேடை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அங்குள்ள கரும காரிய கூடம் ஆகியவற்றில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சிலர் அங்கு சென்று மது அருந்துவது, சூதாடுவது உள்ளிட்ட பலவிதமான சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு மது அருந்துபவர்கள், போதை தலைக்கேறியதும் காலி மதுபாட்டில்களை அங்கேயே போட்டு உடைத்துச் செல்வதுடன் அப்பகுதியில் நின்றுகொண்டு அறுவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. அதனால் உடனடியாக எரிவாயு தகன மேடை பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கோரிக்கை வலுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்கு வரும் ஆனால் வராது என்ற கணக்கில் தான் அதன் பணி நீடித்து கொண்டே இருக்கிறது. - பொன்னுசாமி
