சென்னை, மே 13- காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முன்னாள் முதல்வர், சென்னை பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் தமிழ்ப் பேராசிரியர் மு.பி.பா. என்ற முனைவர் மு.பி.பாலசுப்பிரமணியன் 16.5.1939 ஆம் ஆண்டு தென்காசி மாவட்டம், அய்யாபுரம் கிராமத்தில் பிறந்தவர். அவரது 85 ஆவது பிறந்த நாளை யொட்டி அய்யாபுரம் பேரா. மு.பி.பா. அறக்கட்டளை சார்பில் நான்காவது ஆண்டாக மழலையர் பள்ளி முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
வண்ணம் தீட்டுதல், வண்ணத்தாள் ஒட்டுதல், ஒலிகளைக் கண்டுபிடித்தல், பலூன் ஊதுதல், எழுத்தை கண்டுபிடித்து சொல்லுதல், ஓவியம் வரைதல், பொருட்கள் நினைவு கூருதல், புதிய சொல் உருவாக்குதல், எழுத்து திருத்தம் (தமிழ்,ஆங்கிலம்) உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இரண்டு நாட்கள் நடத்தப்பட்டன. இதில் அய்யாபுரம், குத்துக்கல்வலசை, கொட்டாகுளம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த போட்டிகளில் முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா பேரா. மு.பி.பா. அறக்கட்டளை அறங்காவலர் மு.பி.பா. இன்பவல்லி தலைமையில் நடைபெற்றது. அய்யாபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், தற்போதைய தலைமை ஆசிரியர் ஆரோக்கியசாமி, குற்றாலம் ராமையா, அய்யாபுரம் மூத்த முன்னோடிகள் மற்றும் கிராமப் பெரியவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், அறங்காவலர்கள் ச.முத்துக்குமரன், பா.முத்தமிழ்ச்செல்வன், பா.அன்புச்செழியன், இரா.மணிவண்ணன், நெறியாளர்கள் து.இசக்கியம்மாள், பாப்பா லிங்கம், து.இராசசேகரன், முனைவர்.தா.சோபியா ரேச்சல் மேரி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
போட்டி ஏற்பாட்டாளர்கள் சிவபாலா (நூலகர், பேரா. மு.பி.பா. நூலகம்), முகிலா, சுபா ஸ்ரீ மற்றும் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு கோப்பைகள் வழங்கப்பட்டது.
முன்னதாக, மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பேராசிரியர் மு.பி.பா நூலகம். அவர் பிறந்த ஊரான அய்யாபுரம் கிராமத்தில் 2019 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது, தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.