வீட்டிற்குள் வழிந்தோடிய சாக்கடை கழிவுநீர் செம்மண்டலத்தில் மேயர் தலையீடு: மக்கள் நிம்மதி
கடலூர், செப்.9 - கடலூர் செம்மண்டலம் பகுதியில் பாதாள சாக்கடை கழிவுநீர் வீட்டிற்குள் வடிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது, நேரில் சென்ற மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா அதிகாரிகளை வரவழைத்து உடனடி நடவடிக்கை மேற் கொண்டார். கடலூர் மாநகராட்சி பகுதியில் 1 வது வார்டு பகுதியில் உள்ள கடலூர் செம்மண்டலம் காந்தி நகர், பெரியார் தெரு, வரத ராஜன் நகர் ஆகிய இடங்க ளில் பாதாள சாக்கடை அடைப்பால் கழிவுநீர் வீட்டிற்குள்ளும், சாலை களிலும் வழிந்து ஓடியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகிய நிலையில், 1-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பார்வையிட சென்றார். அப்போது மக்கள் சரமாரி யாக கேள்வி எழுப்பி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், கடலூர் மாநக ராட்சி மேயர் சுந்தரி ராஜா சம்பவம் குறித்து அறிந்தவுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜாவை அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டு கழிவு நீர் வழிந்து நாள்தோறும் செல்கிறது, இதனால் குழந்தைகளை வைத்துக் கொண்டு இருக்க முடியவில்லை, நிரந்தர தீர்வு எடுக்க வேண்டும் என மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட னர். பின்னர் மாநகராட்சி மேயர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்ட நிலையில், எந்த அதிகாரிகளும் இந்த பகுதிக்கு வருகை தந்து நடவடிக்கை எடுக்க வில்லை. ஆத்திரமடைந்த மேயர் சுந்தரி ராஜா, மாநகராட்சி பொறியாளர்களை தொலை பேசியில் அழைத்து பாதாள சாக்கடை கழிவு நீர் வழிந்து கொண்டிருக்கிறது, மக்கள் பாதிப்பு அடைந் துள்ளார்கள், ஏன் நீங்கள் நடவடிக்கை எடுக்க மாட்டீர் களா, சீரமைப்பு பணிகள் செய்ய முடியாதா என கேள்வி எழுப்பினார். உடனடியாக அதிகாரிகள் ஜேசிபி இயந்திரம், பாதாள சாக்கடை அடைப்பு எடுக்கும் இயந்திரம், கழிவு நீர் வாகனம் ஆகியவை களுடன் வருகை தந்து உடனடியாக பணிகளை தொடங்கினர்.