பொதுக்கூட்டம், பேரணிக்கு அனுமதி கோருபவர்களிடம் இழப்பீட்டுக்கான முன்பணம் வசூலிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு அக்.16 வரை அவகாசம் வழங்கியது சென்னை உயர் நீதிமன்றம்.
பிரச்சாரத்துக்கு அனுமதி கோரும் விண்ணப்பங்களை பாரபட்சமின்றி பரிசீலித்து, காவல் துறை அனுமதி தர வேண்டும் என தவெக தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில், பொதுக்கூட்டம், பேரணிகளின்போது பொதுச் சொத்துகள் சேதமடைந்தால் அதற்கான இழப்பீட்டை வசூலிக்கும் விதமாக, ஒரு குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்று அனுமதி வழங்கும் வகையில் விதிமுறைகளை வகுப்பது தொடர்பாக பதிலளிக்க காவல் துறைக்கு உயர நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்பணம் பெற சட்டத்தில் இடமில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து “மனம் இருந்தால் அரசு இதனை செய்யலாம், அசம்பாவிதம் நடைபெறவில்லை என்றால் திருப்பி கொடுத்துவிடலாமே?" என நீதிபதி சதீஷ்குமார் தெரிவித்தார். மேலும், பொதுக்கூட்டம், பேரணிக்கு அனுமதி கோருபவர்களிடம் இழப்பீட்டுக்கான முன்பணம் வசூலிப்பது தொடர்பாக விதிகளை வகுக்க தமிழ்நாடு அரசுக்கு அக்.16 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.