அனைத்து சமூக மக்களுக்கும் பாடுபட்டவர் கோ.வி மணிவண்ணன்
படத்திறப்பு விழாவில் கே. பாலகிருஷ்ணன் புகழாரம்
சிதம்பரம், ஆக.2 - சிதம்பரம் பகுதியில் அனைத்து சமூக மக்களுக்காக களம் கண்டவர் கோ.வி மணிவண்ணன் என்று அவரது படத்திறப்பு விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் புகழாரம் சூட்டினார். சிதம்பரம் அருகே உள்ள ஜெயங்கொண்டபட்டினம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவராக பணியாற்றிய கோவி.மணிவண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 13-ஆம் தேதி கால மானார். அவரது படத் திறப்பு விழா சிதம்பரத்தில் (ஆக. 2) அன்று நடை பெற்றது. விழாவிற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமை தாங்கினார். சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று மணிவண்ணன் படத்தை திறந்து வைத்தார். விசிக விழுப்புரம் தொகுதி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார் உள்ளிட்ட அனைத்து கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டு கோவி. மணிவண்ணன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற புகழஞ்சலி நிகழ்ச்சியில் உரையாற்றிய கே.பாலகிருஷ்ணன், “கோவி.மணி வண்ணன் ஆரம்ப காலத்தில் சாதி அமைப்பில் செயல்பட்டாலும், அதில் இருந்தால் ஒன்றுபட முடியாது என அறிந்து பின்னர் அனைத்து சமூக மக்க ளுக்காக உழைத்து ஊராட்சி மன்ற தலை வராக சிறப்பாக பணியாற்றி அவரது சொந்த இடத்தில் நியாய விலைக்கடை, புயல் பாதுகாப்பு மையம் அமைத்து, நடு நிலைப்பள்ளியாக இருந்ததை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அனைத்து சமூக மக்களின் நலனுக்காக பாடுபட்டார்”என்றார். சிதம்பரத்தில் காவல்துறைக்கும், சமூக நீதிக்கும் எதிராக மார்க்சிஸ்ட் கட்சி நடத்திய பல்வேறு போராட்டத்தில் இணைந்து களத்தில் நின்றுள்ளார். சாதிய பாகுபாடு இல்லாமல் மாணவர்கள் கல்வி பயில இவர் ஏராளமான உதவிகள் செய்துள்ளார். சாதிகளை கடந்து அவர் பணியாற்றியதால் இந்த மேடையில் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சி களை சார்ந்த தலைவர்கள் புகழஞ்சலி செலுத்துகின்றனர் என்றும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக குமராட்சி ஒன்றியச் செயலாளர் ராஜேந்திரகுமார், தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைமை நிலைய செயலாளர் மு.கண்ணன், தருமபுரி முன்னாள் மக்களவை உறுப்பினர் பு.த இளங்கோவன், திமுக மாநில பொறியாளர் அணி தலைவர் துரை.கி சரவணன், விசிக மாவட்டச் செயலாளர் அரங்க தமிழ்ஒளி, சிபிஐ மாவட்ட துணைச் செயலாளர் வி.எம் சேகர், விசிக முன்னாள் மாவட்டச் செயலாளர் செல்லப்பன், சிபிஎம் சிதம்பரம் நகரச் செயலாளர் ராஜா, சிபிஐ நகரச் செயலாளர் தமிம்முன் அன்சாரி உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.