பருவமழையை எதிர்கொள்ள அரசு இயந்திரங்கள் தயாராக வேண்டும்
புதுச்சேரி ஆட்சியர் உத்தரவு
புதுச்சேரி, ஆக.19- பருவமழையை எதிர்கொள்ள அரசு இயந்திரங்கள் தயாராக இருக்க வேண்டும் என்று புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். புதுச்சேரி அரசின் மாவட்ட நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் பருவமழை தொடர்பான ஆலோசனை கூட்டம் வழுதாவூர் சாலையில் உள்ள ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க் கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு புதுச்சேரி ஆட்சியர் குலோத்துங்கன் தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் மாவட்ட உதவி ஆட்சியர்கள் இசிட்டா ரதி, அங்கித்குமார், காவல்துறை முதுநிலை கண்காணிப்பாளர் நித்யா ராதாகிருஷ்ணன் மற்றும் நகராட்சி, மின்துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்பு துறை, வேளாண் துறை, கல்வித்துறை, மீன்வளத்துறை மற்றும் அனைத்து கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் உட்பட துறை அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஆட்சியர் குலோத்துங்கன் பேசுகையில்,“செப்டம்பர் மாத இறுதிக்குள் புதுச்சேரியில் உள்ள அனைத்து வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும். வாய்க்கால்களை தூர்வாரி பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து குடிநீர் தொட்டிகளையும் சுத்தம் செய்ய வேண்டும். மழைக்காலங்களில் கூடுதல் மோட்டார் பம்புகள் தயார் நிலையில் வைக்க வேண்டும். பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். மழைகாலத்தில் 24 மணி நேரமும் அரசு ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும்”என்றார். கடந்த முறை நீர் தேங்கிய கிருஷ்ணா நகர், ரெயின்போ நகர், வெங்கடா நகர் மற்றும் பூமியான் பேட்டை உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் வாய்க்கால்களை தூர்வாரி மீண்டும் நீர் தேங்காத அளவிற்கு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரிகள் சாத்த னூர் மற்றும் வீடுர் அணைகள் திறக்கும் போது புதுவையின் கரையோரம் உள்ள கிராம மக்கள் பாதிக்காத வகையில் தமிழக அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்க வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் 25 ஆயிரம் மணல் மூட்டைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் புதுவை யில் உள்ள அனைத்து ஏரிகளையும் கண்காணிக்க வேண்டும். போதுமான மருந்து மாத்திரைகள், தேவையான ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.