tamilnadu

img

பொது வேலைநிறுத்தம்:  வட மாவட்டங்களில் எழுச்சி

பொது வேலைநிறுத்தம்:  வட மாவட்டங்களில் எழுச்சி

 கடலூர், ஜூலை 9- நாடு முழுவதும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும், மத்திய அரசின் தொழிலாள விரோத சட்டங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவிலான வேலை நிறுத்தத்துக்கு மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்தன. கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மறியல் போராட்டங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இவர்களில் 1500 பேரை போலீசார் கைது செய்தனர். கடலூரில் சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.பழனிவேல் தலைமையில் நடைபெற்ற மறியலில் 200 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பண்ருட்டியில் விவசாய சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 200 பேர் கைதானார்கள். விருத்தாசலத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் பி.கருப்பையன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 100 பேர் கைதானார்கள். நெய்வேலியில் சிஐடியு என்எல்சி தொழிலாளர் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எஸ். திருஅரசு தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 120 பேர் கைது செய்யப்பட்டனர். சிதம்பரத்தில் எம்எல்ஏ பங்கேற்பு விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 150 பேர் கைதானார்கள். கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, விதொச மாநிலக்குழு உறுப்பினர் பழ. வாஞ்சிநாதன், சிஐடியு மாவட்ட துணை த்தலைவர் சங்கமேஸ்வரன், விவசாயிகள் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் கற்பனைச்செல்வம், நெடுஞ்சேரலாதன், ராஜா,  திமுகவின் தொழிலாளர் முன்னணி சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு தலைமை தபால் நிலையம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர். குறிஞ்சிப்பாடியில் விவசாய சங்க மாவட்டச்  செயலாளர் ஆர்.கே. சரவணன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 100 பேர் கைதானார்கள். திட்டக்குடியில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் என்.தேசிங்கு தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 125 பேர் கைதானார்கள். வேப்பூரில் விவசாய சங்க மாவட்ட தலைவர் ஜி.ஆர். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 50 பேரை கைது செய்தனர். வேலை நிறுத்தத்தை ஆதரித்து காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம், வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் தலைவர் ஜெயஸ்ரீ தலைமை தாங்கினார். பொது வேலை நிறுத்தத்தை முன்னிட்டு கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் தனியார் பேருந்துகள் செல்லவில்லை. ஆட்டோக்கள் ஓடவில்லை. அதேபோல் வங்கி அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன, எல்ஐசி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களும் வெறிச்சோடி கிடந்தன. நெய்வேலி என்எல்சி, கடலூர் சிப்காட் உள்ளிட்ட தொழிற்சாலைகளில் ஏராளமான தொழிலாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. விழுப்புரத்தில் ரயில் மறியல்: 500 பேர் கைது பொது வேலை நிறுத்தத்தையொட்டி விழுப்புரம் ரயில் நிலையத்தில் சிபிஎம் மற்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட வெகுஜன அரங்குகள் சார்பில் நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன் உட்பட ஏராளமானோரை போலீசார் கைது செய்தனர்.  இந்த போராட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சு.வேல்மாறன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் எஸ்.கீதா, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன், தலைவர் ஆர்.தாண்டவராயன், பொருளாளர் பி.சிவராமன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாதர் சங்க மாவட்ட பொருளாளர் சித்ரா, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் பி.முருகன், மாவட்ட செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி ஏ.சங்கரன் வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.பிரகாஷ் உட்பட ஏராளமானோரை கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். திண்டிவனம் திண்டிவனம் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய ஜனநாயக மாதர் சங்கம், மாணவர் சங்கம் சார்பில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன், விதொச ஜி.ராஜேந்திரன் வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் அறிவழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  விழுப்புரம் விழுப்புரம் தலைமை தபால் அலுவலகம் முன்பு அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.மூர்த்தி, மாவட்டத் தலைவர் எஸ்.முத்துகுமரன் உட்பட 70 பெண்கள் உட்பட 320 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. செங்கத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எம். சிவக்குமார், சிஐடியு, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கணபதி, ஏ. லட்சுமணன், சரவணன் மற்றும் ஏஐடியுசி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற அகில இந்திய வேலை நிறுத்த மறியலுக்கு சிஐடியு மாவட்ட தலைவர் கே. காங்கேயன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம், விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் எம்.பிரகலநாதன், மாதர் சங்க நிர்வாகி கே. வாசுகி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.   முன்னதாக சுதந்திர தின நினைவுத் தூண் அருகில் இருந்து நடைபெற்ற ஊர்வலத்தில் எல்பிஎஃப், சிஐடியு, ஏஐடியூசி, எச்எம் எஸ் உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பெரணமல்லூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் நிர்வாகிகள் ந.சேகரன், பிரபாகரன், கௌதம்முத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போளூரில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், நிர்வாகிகள் சிவாஜி, ரவிதாசன், வீரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தண்டராம்பட்டில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் எஸ். ராமதாஸ், ச.குமரன், அண்ணாமலை, ரவி, கோபி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கலசபாக்கத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு, வாலிபர் சங்கம், விவசாயிகள் சங்கம் நிர்வாகிகள் கே.கே. வெங்கடேசன், டி. கே. வெங்கடேசன், பி.சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆரணியில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் சிஐடியு நிர்வாகி எம்.வீரபத்திரன், எல்பிஎஃப் காசிலிங்கம், ஏஐடியூசி குப்புரங்கம், நிர்வாகிகள் ஜெயசந்திரன், இளங்கோ, வாசுதேவன், சி.அப்பாசாமி, பெ.கண்ணன், வெ.மன்னார், சி.ரமேஷ்பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.