கல்வராயன் மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை
கள்ளக்குறிச்சி, ஆக.11- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன் மலை ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் கல்வராயன்மலையில் உள்ள நீர்வீழ்ச்சிகளில் அதிக அளவில் நீர் கொட்டி வருகிறது.பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மதியம் ஒரு மணி அளவில் இருந்து சுற்றுலா பயணிகள் குளிக்கத் திடீர் தடை விதிக்கப்பட்டது. விடுமுறை நாள் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்த நிலையில், மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக வனத்துறை அதிகாரிகள் குளிக்கத் தடை விதித்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.