மின்கம்பத்தில் விபத்து: ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
திருவண்ணாமலை, செப்.26- திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம், கிழக்கு பிரிவில் கடந்த செப்.20 அன்று, மின்வாரிய தொழிலாளி ஒருவர் மின் கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது தவறாக அந்த மின்கம்பத்திற்கு மின் இணைப்பு வழங்கப்பட்டதால் மின் விபத்து ஏற்பட்டது. அதில் பாதிக்கப்பட்ட தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்திற்கு பொறுப்பானவர்கள் மீது நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிஐடியு சார்பில் பலமுறை மேற்பார்வை பொறியாளரை சந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க எழுத்துப்பூர்வமாக கடிதம் கொடுத்து வலியுறுத்தப்பட்டது. ஆனாலும் எந்த நடவடிக்கையும் இதுநாள் வரை எடுக்கவில்லை. இதுபோன்று மற்ற பிரிவுகளில் விபத்து ஏற்படும் போது உடனடியாக விரைந்து நடவடிக்கை எடுக்கும் நிர்வாகம், திருவண்ணாமலை மாநகரம் மைய பகுதியான மேற்கு பிரிவு என்றால் மட்டும் நடவடிக்கை எடுக்க மறுப்பது எதனால் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிஐடியு சங்க நிர்வாகிகள் செப்.26 அன்று, மேற்பார்வை பொறியாளர் அலு வலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.