tamilnadu

img

பெண் தொழிலாளர்களையும், சிஐடியு தலைவர்களையும் தாக்கிய காவல்துறைக்கு சிபிஎம் கண்டனம்

பெண் தொழிலாளர்களையும், சிஐடியு தலைவர்களையும் தாக்கிய செங்கல்பட்டு காவல்துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுhர், சுங்குவார்சத்திரம், ஒரகடம், படப்பை போன்ற பகுதிகளில் இயங்கி வரும் பன்னாட்டு கம்பெனிகளில் பணிபுரியும் தொழிலாளர்களில் வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகம். இவர்கள் அருகில் உள்ள விடுதிகளில் தங்கி பணிக்குச்சென்று வருகின்றனர். இவ்விடுதிகளில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும் நான்கு பேர் தங்கக்கூடிய அறைகளில் 10 பேர்கள் தங்க வைக்கப்படுவதாகவும் தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை எனவும் புகார்கள் தொடர்ந்து வந்துகொண்டுள்ளன.

ஸ்ரீபெரும்புதுhரில் உள்ள பாக்ஸ்கான் என்ற செல்போன் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் பெண் தொழிலாளர்கள் தங்கியுள்ள விடுதியில் அளிக்கப்பட்ட உணவை சாப்பிட்ட போது சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவர் இறந்துவிட்டதாக தகவல் பரவியதை தொடர்ந்து தொழிலாளர்கள் பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். முதல் நாள் இரவிலிருந்து அடுத்த நாள் காலை வரை இந்த மறியல் தொடர்ந்துள்ளது. தகவல் தெரிந்து காஞ்சிபுரம் மாவட்ட சிஐடியு சங்க நிர்வாகிகள் தோழர் இ.முத்துக்குமார் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று தொழிலாளர்களுக்கு ஆதரவை தெரிவித்துள்ளனர். அங்கு அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆகியோருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு ஏற்பட்டு தொழிலாளர்கள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர். 

அதே நேரத்தில் ஒரகடம் பகுதியிலும் தொழிலாளர்கள் சாலை மறியல் செய்துள்ளனர். அங்கும் அமைதிபடுத்த சிஐடியு சங்கத்தலைவர்கள் சென்றுள்ளனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களை செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல்துறையினர்  தொழிலாளர்களை கண்மூடித்தனமாக அடித்து இழுத்துச் சென்றுள்ளனர்.  பெண் தொழிலாளர்களை ஆண்காவலர்கள் தாக்கி இழுத்துச்சென்றுள்ளனர். இதை தட்டிக்கேட்ட இ.முத்துக்குக்குமார், பகத்சிங்தாஸ் உள்ளிட்ட சிஐடியு நிர்வாகிகளையும் தாக்கியதுடன் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலில் காஞ்சிபுரம் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் இந்த அத்துமீறிய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

அத்துமீறிய நடவடிக்கையில் ஈடுபட்ட செங்கல்பட்டு காவல்துறை கண்காணிப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது. கைது செய்யப்பட்ட சிஐடியு நிர்வாகிகளையும், அதேபோல் கைது செய்யப்பட்டு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், சிஐடியு நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப்பெற வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறது.

அதே போல் அந்த பகுதிகளில் உள்ள தங்கும் விடுதிகளில் அடிப்படை வசதிகள் உள்ளதா, அரசின் வழிகாட்டுதல் மற்றும் விதிமுறைகள் முழுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உறுதி செய்திட வேண்டுமெனவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்களுக்கு சிறந்த சிகிச்சை வழங்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

;