சென்னையில் ஒரே நாளில் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னை, அக்.21- சென்னை தீபாவளி பண்டிகையை யொட்டி சென்னை மாநகரில் செவ்வாயன்று (அக்,21) ஒரு நாளில் மட்டும் 60 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று (அக்.20) கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையொட்டி, பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, இனிப்புகளை பரிமாறி, பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். முன்னதாக, பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்கும் போது சில வழிமுறைகளை கையாள வேண்டும் என்றும் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்றும் சென்னை மாநகாராட்சி அறிவுறுத்தியிருந்தது. தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் வழங்கிய நேரமான காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தது. மேலும், பட்டாசு வெடித்த கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டக்கூடாது எனவும், அவற்றை தனியாக சேகரித்து தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் மாநகராட்சி அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் பெரும்பாலா னோர் அனுமதிக்கப்பட்ட நேரம் தாண்டி பட்டாசுகளை வெடித்தனர். இதனால், சென்னையில் மட்டும் அனு மதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தாக 319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
