சென்னை செம்பரம்பாக்கம் பகுதியில் இன்று 20 செ.மீ மழை பெய்யும் என மத்திய நீர்வளத்துறை எச்சரித்துள்ளது.
மத்திய நீர்வளத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது, செம்பரம்பாக்கம் ஏரி நீர் பிடிப்பு பகுதிகளில் இன்று காலை 6 மணி முதல் நாளை காலை 6 மணி வரை 150 முதல் 200 மி.மீ. மழை பெய்யும். இது சுமார் 15 செ.மீ முதல் 20 செ.மீ வரை மழை பொழிவு இருக்கும். இதனால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 7,062 கனஅடி நீர் அதிகரிக்கும். அதனால், ஏரிக்கு அருகே உள்ள கிராமத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதே போல அருகே உள்ள அடையாற்று பகுதியில் அதிக மழை பொழிய வாய்ப்புள்ளது. நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
எனவே ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், சென்னை பகுதிகளில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள மக்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுக்க வேண்டும். அது போல் சென்னை விமான நிலையத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு குறித்து அதிகாரிகள் கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ளவர்கள் நிவாரண பகுதிகளுக்கு செல்ல வேண்டும். செம்பரம்பாக்கத்திற்கு தற்போது நீர் வரத்து வினாடிக்கு 4000 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
செம்பரம்பாக்கம் நீரின் மட்டம் தற்போது 21.67 அடியாக உள்ளது. ஏரிக்கு வரும் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் இந்த ஏரி முழு கொள்ளளவான 24 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.