கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித்தர வலியுறுத்தல்
தருமபுரி, ஆக.11- கட்டுமானத் தொழி லாளர்களுக்கு நல வாரியமே வீடு கட்டித்தர வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் தருமபுரி மாவட்ட 12 ஆவது மாநாடு, பாப்பாரப்பட்டி அறிவுக்கண் திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.சண்முகம் தலைமை வகித்தார். நிர்வாகி ஜி.ஜெமினி மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் சுரேஷ் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட்ட துணைத்தலைவர் கே.விக்ரம் வரவேற்றார். சிஐடியு மாநில துணைத்தலைவர் ஆர்.சிங்காரவேலு மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் சி.கலாவதி, பொருளாளர் ஜி.செல்வராஜ் ஆகியோர் அறிக்கைகளை முன்வைத்தனர். சிஐடியு மாவட்ட இணைச்செயலாளர் சி.கவிதா வாழ்த்திப் பேசினார். இம்மாநாட்டில், கட்டுமானப் பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயரத்தி வழங்க வேண்டும். விண்ணப்ப மனுவை உடனடியாக பரிசீலித்து, நலவாரிய பயன்களை உடனே வழங்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலவாரியமே வீடு கட்டித்தர வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் மாவட்டத் தலைவராக சி.சண்முகம், செயலாளராக சி.கலாவதி, பொருளாளராக சி.அங்கம்மாள், துணைத்தலைவர்களாக ஏ.முருகேசன், ஜி.செல்வராஜ், எம்.சுரேஷ், இந்திராணி, துணைச்செயலாளர்களாக கோபால், ரஜினி, குப்பன், கண்ணன் உபட்ட 21 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது. சிஐடியு மாநிலச் செயலாளர் சி.நாகராசன் நிறைவுரையாற்றினார். முடிவில், ஏ.முருகேசன் நன்றி கூறினார்.