குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்ட வழக்கிலிருந்து விடுதலை
ஈரோடு, செப்.18- குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்ட வழக்கிலிருந்து 8 பேர் விடுவிக்கப்பட்டனர். குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஈரோடு மாவட்டம், நசியனூரில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜன.8 இல் மறியல் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்ற நிலையில், விவசாயிகள் சங்க முன்னாள் மாநில நிர்வாகியான மறைந்த எம்.நாச்சிமுத்து மற்றும் விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் முத்து பழனிசாமி ஆகியோர் தலைமையில் என்.நாகராஜன், என்.பாலசுப்பிரமணி, வி.இளங்கோ, பி.தங்கவேல், வீரன், பா.லலிதா மற்றும் என்.கலாமணி ஆகியோர் மீது 2023 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈரோடு நீதிமன்றம் எண்.3 இல் வழக்கு நடைபெற்று வந்தது. மாதந்தோறும் நீதிமன்றத்தில் குறிப்பிடப்படும் வாய்தாவிற்கு ஆஜராகி வந்தனர். இந்நிலையில், வியாழனன்று சித்தோடு காவல் நிலையத்திற்கு வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அழைக்கப்பட்டனர். அங்கிருந்து காணொலிக் காட்சி வழியாக வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது மேற்படி 8 பேரும் வழக்கிலிருந்து விடுவிப்பதாக அறிவிக்கப்பட்டனர்.